பூந்தாழங்குடி, கீழமணலி, மாங்குடி கிராமங்களுக்கு புதிய பேருந்து வசதி சிபிஎம் போராட்டம் வெற்றி
மன்னார்குடி, ஆக. 30- மன்னார்குடி, லட்சுமாங்குடி, கமலாபுரம், பூந்தாழங்குடி, கீழமணலி, மாங்குடி வழியாக திருவாரூர் சென்று, அதேவழியில் மன்னார்குடிக்கு வந்து சேரும் புதிய பேருந்து சேவை துவங்கியது. புதிய பேருந்தை சிபிஎம் (பொறுப்பு) ஒன்றியச் செயலாளர் சத்தியசீலன் தலைமையில், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் முறைசாரா கூலித் தொழிலாளர்கள், மன்னார்குடி, கபலாபுரம், பூந்தாழங்குடி, கீழமணலி, மாங்குடி ஆகிய இடங்களுக்கு பேருந்து சேவை இல்லாமல் நீண்ட காலமாக மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அதேபோல், பூந்தாழங்குடி கிராமத்தில் தூய்மையான குடிநீர் இன்றி சிரமப்பட்டு வந்தனர். இவ்வாழ்வாதார கோரிக்கைகளை, உடனே மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஆக.11 அன்று கமலாபுரம் பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. ஆக.11 அன்று சாலை மறியல் போராட்டம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு பிரகாஷ், மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், பொறுப்பு செயலாளர் எஸ். சத்தியசீலன், மூத்த தோழர்கள் எம். திருஞானம், மன்னன் மணி, வி. லட்சுமணன், கிளைச் செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன் மைக்காடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கோரிக்கைகளின் மீது, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண கூத்தாநல்லூர் வருவாய் வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர், மன்னார்குடி-திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர்கள், காவல்துறையினர், போராட்ட இடத்திற்கு வந்தனர். பேச்சு வார்த்தையின் முடிவில் இம்மாத இறுதிக்குள் புதிய பேருந்து மன்னார்குடியிலிருந்து, லட்சுமாங்குடி, கமலாபுரம், பூந்தாழங்குடி, கீழ மணலி, மாங்குடி வழியாக திருவாரூர் ஒரு நடை செல்லவும், திருவாரூரில் இருந்து மாங்குடி, கீழ மணலி, பூந்தாழங்குடி, கமலாபுரம், லட்சுமாங்குடி வழியாக மன்னார்குடி வந்தடையவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாக்குறுதி அளித்திருந்தனர். அதேபோல் பூந்தாழங்குடி கிராமத்திற்கு குடிநீர் வசதி இம்மாத இறுதிக்குள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, புதிய பேருந்து சேவை இவ்வழித்தடத்தில் துவக்கப்பட்டது. நீண்ட காலமாக இக்கிராம மக்களின் கோரிக்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சிகள் மற்றும் போராட்டத்தின் பலனாக இவ்வெற்றிகள் கிட்டின. இப்போராட்டத்தின் விளைவாக பூந்தாழங்குடி கிராமத்திற்கு பைப் மூலம் தூய குடிநீர் வசதியும் கிடைத்தது.