60 குடும்பங்களுக்கு தீர்வு வழங்கக் கோரி சிபிஎம் மனு
உய்யங்கொண்டான் ஆற்றங்கரையோரம் வசிக்கும்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 14- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிச் செயலாளர் ரபீக்அகமது, உய்யங்கொண்டான் ஆற்றங்கரையோரம் வசிக்கும் 60 குடும்பங்களின் சார்பில் அதிகாரியிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், திருச்சி உய்யங்கொண்டான் ஆற்றுக்கரையோரம் உள்ள பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக 60 குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். ஆதிநகர், சாந்தா ஷீலா நகர் பகுதியில் குடியிருக்கும் இவர்கள், கட்டுமானத் தொழில் செய்பவர்களாகவும், தினக் கூலி வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். தினக்கூலியாக சம்பாதித்த பணத்தில் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் சம்பாதிக்கும் பணம் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியை அடைப்பதற்கே போய் விடுவதால் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் குடியிருக்கும் அனைவரும் முறையாக பட்டா. வீட்டு வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை, இணைப்புவரி, மின்சார இணைப்பு ஆகியவை பெற்று வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இப்பகுதியில் 40 அடி ரோடு வருவதாகவும், இதற்காக ரோடு அளவீடு செய்து வருவதாகவும் அறிகின்றோம். ஆனால் ரோடு அளவீடு செய்வது என்பது மூன்று விதமான குறியீடு மூலம் எடுக்கப் போவதாக கூறுவதால், குழப்பமான ஒரு சூழ்நிலையில் வசிக்கின்றனர். ரோட்டின் ஒரு பகுதியில் 23 அடியாகவும், மற்றொருபுறம் 45 அடியாக எடுக்கப் போவதாகவும் அளவீடு செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்திலும், கருப்பு நிறத்திலும், பென்சிலிலும் மார்க் செய்து சென்று உள்ளார்கள். இங்கு வசிப்பவர்கள், வீட்டை எவ்வாறு இடிக்கப் போகிறார்கள் என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இது பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. ஆகவே, தாங்கள் தலையிட்டு உடனடியாக இப்பகுதி மக்களுக்கு சரியான தீர்வை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என அவர் கூறியிருந்தார்.