tamilnadu

img

பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே அரசு மதுக்கடையை திறக்க எதிர்ப்பு சிபிஎம் தலைமையில் கையெழுத்து இயக்கம்

பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே  அரசு மதுக்கடையை திறக்க எதிர்ப்பு சிபிஎம் தலைமையில் கையெழுத்து இயக்கம்

பொன்னமராவதி, ஜூலை 24-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகம் அருகே, அரசு மதுபான கடை திறக்க முடிவு செய்து, மிக விரைவில் திறக்கப்பட உள்ளது.  இந்தச் சூழலில், அதன் மிக அருகாமையில் இருக்கும் அமல அன்னை, லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பொன் புதுப்பட்டி அரசு பள்ளி, வாரம் இருமுறை நடக்கும் வாரச்சந்தை, தினந்தோறும் பல்லாயிரம் மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையம், அண்ணா நகர் குடியிருப்பு பகுதி ஆகியவற்றுக்குச் செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள், பெண்கள், இந்த மதுக்கடையால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது. எனவே, மேற்கண்ட கடையை பேருந்து நிலைய வளாகம் அருகே திறக்க கூடாது என வலியுறுத்தி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பொதுமக்கள், வியாபாரிகள் பங்கேற்புடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினருமான எம்.சின்னத்துரை பங்கேற்று, மேற்கண்ட கோரிக்கை மனுவை வட்டாட்சியரிடம் அளித்து கோரிக்கையை வலியுறுத்துகிறார். மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் பக்ருதீன்   தலைமையில், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், சிஐடியு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகம் அருகில் இருக்கக்கூடிய பொதுமக்கள், பெண்கள், வியாபாரிகள், மாணவ, மாணவியரிடம் கோரிக்கைகளை விளக்கி, கையெழுத்து பெற்றனர்.  இதில், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குமார், வர்க்க வெகுஜன நிர்வாகிகள், திராவிடர் கழக ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.