சிறுதாவூர் பட்டியல் இன மக்களின் நிலத்தை மீட்க ஜூலை 31இல் சிபிஎம் தலைமையில் போராட்டம்
செங்கற்பட்டு மாவட்டம், திருப் போரூர் வட்டம் சிறுதாவூர் கிராமத்தில் 1967-இல் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலம் பட்டியல் இன மக்களிடமிருந்து மோசடியாக அபகரிக்கப் பட்டுள்ளது. பரணி ரிசார்ட்ஸ் இயக்குநர் சித்ரா உள்ளிட்டோர் இந்த நிலங்களை அபகரித்துள்ளனர். இந்த நிலத்தை மீட்டெடுக்க சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஜூலை 31 அன்று காலை 10 மணிக்கு ஓஎம்ஆர் சாலை கருங்குழிபள்ளம் அருகில் போராட்டம் நடைபெறுகிறது. 1967இல் வழங்கப்பட்ட நிலம் 1967-இல் முதலமைச்சர் அறிஞர் அண்ணா, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 20 பட்டியல் இன குடும்பங்களுக்கு தலா 2.5 ஏக்கர் விவசாய நிலம், 10 சென்ட் குடியிருப்பு மனை மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக 1 ஏக்கர் என மொத்தம் 53 ஏக்கர் நிலத்தை சட்டப்பூர்வமாக பட்டா வழங்கி கொடுத்தார். இந்த நிலத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக 1980-85 வரை மக்கள் தொடர்ச்சியாக விவசாயம் செய்து வந்தனர். 1988 ஆம் ஆண்டு வரை வருவாய்த்துறை அடங்கலில் பதியப்பெற்றுள்ளது; 1992-இல் தமிழக அரசின் சிறு, குறு விவசாயிகளின் அட்டை பெற்று பயன்பெற்றுள்ளனர். நில அபகரிப்பு மற்றும் மோசடி 1992-இல் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா சிறுதாவூர் சொகுசு பங்களாவில் தங்கத் தொடங்கிய பின், பட்டியல் இன மக்கள் நிர்ப்பந்தமாக வெளியேற்றப்பட்டனர். பலர் பெயரில் போலி கிரயப் பத்திர பதிவுகள் நடைபெற்று, முறையான விசாரணை நடைபெறாமல் பட்டா மாற்றங்கள் செய்யப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்பட்டன. கிடைத்துள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த பலர் பெயரில் பட்டாக்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் பங்களாவைச் சுற்றியுள்ள காம்பவுண்டுக்குள் சுமார் 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் வளைக்கப்பட்டுள்ளது. சிபிஐ(எம்) போராட்டம் நிலமிழந்த மக்கள் 2006-இல் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, வட்டாட்சியர் என அரசு அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை களத்தில் இறங்கின. 22.07.2006 அன்று கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் வலுவான நில மீட்புப் போராட்டம் நடத்தப் பட்டது. அதன் பின்னர் தமிழக அரசு, உரிய வர்களுக்கு நிலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்தது. 26.07.2006 அன்று என்.வரதராஜன் அப்போதைய முதல்வர் கலைஞரிடம் விரிவான கோரிக்கை மனு வழங்கினார். இந்த மனுவில் “போலியான பத்திரப் பதிவுகள், பட்டாக்களை ரத்து செய்து சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்கிட வேண்டும்” என்று வலியுறுத்தினார். நீதித்துறை தலையீடும் விசாரணையும் தோழர் என்.வரதராஜனின் கோரிக்கையை அடுத்து 27.7.2006 அன்று நீதியரசர் கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது விசாரணையை தீவிரப்படுத்தி 20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்தது. ஆணையத்தின் முன் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். சிறுதாவூர் மக்கள், எதிர்தரப்பினர் என பலரிடம் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை விசாரணை செய்த ஆணையம், பட்டியல் இன விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தது. மேலும் சிறுதாவூர் பங்களா வளாகத்தில் வளைக்கப்பட்டுள்ள 34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களையும் அரசு கையகப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பும் தொடர் போராட்டமும் சிறுதாவூர் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஆணை யத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடுத்த னர். ஆனால் உச்சநீதிமன்றம் இதை நிராகரித்து, நிலத்தை மீட்டு பட்டியல் இன மக்களிடமே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட நீதியரசர் சிவசுப்பிரமணியத்தின் பரிந்துரைபடி அமலாக்கிட வேண்டும் என 2014 ஜூலை 4 அன்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் 24.2.2024 அன்று செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐ(எம்) மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்கப்பட்டது. நிலங்களின் ஆவணங்களில் பெயர் மற்றும் நிலவகை மாற்றம் செய்து 20 குடும்பங்களில் உள்ள பயனாளிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு நிலத்தைப் பிரித்து வழங்க வேண்டும் என கோரப்பட்டது. பஞ்சமி நில மீட்பு இயக்கத்தின் வரலாறு சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கி லேயர்கள் ஆட்சிக் காலத்தில் செங்கற்பட்டு ஆட்சியர் ஜேம்ஸ் ஸ்ரெமென்கீர் பரிந்துரையால் தமிழகம் முழுவதும் பட்டியல் இன மக்களுக்கு சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலம் 10 ஆண்டுகளுக்கு யாருக்குமே விற்க முடியாது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டியல் இனத்தவருக்குத்தான் விற்க முடியும், இதர சாதியினர் இந்த நிலத்தை வாங்கினால் செல்லாது என்பது போன்ற கடுமையான நிபந்தனைகளோடு வழங்கப்பட்டது. ஆனால் 12 லட்சம் ஏக்கர் நிலமும் பட்டியல் இன மக்களிடம் இன்று இல்லை, அம்மக்களிட மிருந்து பறிக்கப்பட்டுள்ளது. 1994-இல் பஞ்சமி நில மீட்பு இயக்கம் உருவாக்கப்பட்டு காரணை, புதுச்சேரி போன்ற கிராமங்களின் பஞ்சமி நிலங்களை மீட்க செங்கற்பட்டில் நடந்த ஊர்வலத்தில் அன்றைய ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டனர். ததீஒமு பங்களிப்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (ததீஒமு) சிபிஐ(எம்), விசிக, எச்ஆர்டிஎப் உள்ளிட்ட அமைப்புகளை ஒன்றிணைத்து பஞ்சமி நில மீட்பு போராட்டங்களை நடத்து கிறது. 2015-இல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 2.50 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்தகைய பின்னணியில், சிறு தாவூர் நிலம் மீட்புக்கான தொடர் போராட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. “உழுபவருக்கே நிலம் சொந்தம், நிலம் எங்கள் உரிமை” என்ற அடிப்படையில் சிபிஐ(எம்), தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் இணைந்து சமரசமற்ற போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்போம்!