tamilnadu

கல்லூரி முன்பு போராடிய மாணவர் சங்க தலைவர்கள் மீது தாக்குதல் அரியலூர் காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

கல்லூரி முன்பு போராடிய மாணவர் சங்க  தலைவர்கள் மீது தாக்குதல் அரியலூர் காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

அரியலூர், ஆக. 17-  அரியலூரில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த கல்லூரியில் கழிவறை வசதி இல்லை. குடிநீர் வசதியும் இல்லை. வகுப்பறையை முறையாக பராமரிப்பதும் இல்லை. ஓய்வு எடுப்பதற்கு சரியான ஓய்வு அறையும் இல்லை. கல்லூரி வளாகம் முழுவதும் செடி கொடிகள் நிறைந்து விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.  மேற்கண்ட அடிப்படை வசதிகளை செய்வதற்கு கல்லூரி நிர்வாகம் பல ஆண்டுகளாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் நியாயமான கோரிக்கைகளுக்காக ஆக.14 அன்று ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பு அடிப்படை வசதி செய்து தரக்கோரி அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர்.  ஆனால், கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் சேர்ந்து, போராட்டம் நடத்திய மாணவர் சங்க தலைவர்கள் மீது அடிதடி தாக்குதல் நடத்தியது, ஒருமையில் மாணவிகளை பேசியது, மாணவர் சங்கத் தலைவரை கீழே தள்ளிவிட்டு அடித்தது போன்ற அராஜகத்தில் ஈடுபட்ட அரியலூர் அரசு கல்லூரி முதல்வர் மீதும், காவல்துறை அதிகாரிகள், குறிப்பாக அரியலூர் டிஎஸ்பி ரகுபதி மீதும், துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசாங்கமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடிப்படை உரிமைகளை செய்து கொடுக்க வேண்டும் என்று நியாயமான முறையில் போராட்டம் நடத்திய மாணவர் சங்க நிர்வாகிகளை தகாத வார்த்தையி் பேசுவது, தாக்குவது போன்ற செயல்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் மாவட்டக்குழு சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக அரசு, அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அறிக்கையின் வாயிலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், அரியலூர் மாவட்ட எஸ்பி விஸ்வேஸ் பா.சாஸ்திரியிடம் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளார்.