தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 319 ஆவது ஆண்டு தினம்
மயிலாடுதுறை, ஜூலை 13- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு தமிழறிஞர் சீகன்பால்கு வந்த 319 ஆவது ஆண்டு தினம் புதனன்று கொண்டாடப்பட்டது. 222 நாட்கள் கப்பல் வழியாக பயணித்து, கிறிஸ்தவத்தை பரப்ப தரங்கம்பாடி வந்து தமிழுக்காக உழைத்தவர் தான் தமிழறிஞர் சீகன்பால்கு. கிறிஸ்தவ மத போதகரான, ஜெர்மனியைச் சேர்ந்த பாத்லோமேயு சீகன்பால்கு 10.7.1682 அன்று ஜெர்மனியில் சாக்சோனி மாநிலத்தில் உள்ள புல்நிட்ஸ் என்ற ஊரில் பிறந்தார். டென்மார்க் அரசர் 4 ஆம் பிரட்ரிக்கால் சமய பணி செய்ய அனுப்பப்பட்டு 11.11.1705 அன்று தன் நண்பர் ஹென்ரிக்புளுசோவுடன் கோபன்ஹேகனில் இருந்து கப்பலில் இந்தியா புறப்பட்டார். 222 நாட்கள் கப்பல் பயணத்திற்கு பின் 9.7.1706 தரங்கம்பாடி வந்தடைந்தார் அவர், தரங்கம்பாடி வந்ததன் நினைவாக நினைவு சின்னம் ஒன்று கடற்கரையையொட்டி அமைக்கபட்டுள்ளது. தரங்கம்பாடி வந்த சீகன்பால்கு தமிழ்மொழியின் மீது, ஆர்வம் கொண்டு 8 மாதங்களில் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து தமிழில் அச்சு எழுத்துக்களை வடிவமைத்து அச்சுக் கலையில் தமிழைக் கொண்டு வர பெரும் முயற்சி மேற்கொண்டு, தரங்கம்பாடியில் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழில் அச்சு கூடத்தை 24.10.1712 அன்று அமைத்தார். 1715 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முதலாக பொறையார் கடுதாசிப்பட்டறை என்ற கிராமத்தில், ஒரு காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையையும், அச்சு மை தயாரிக்கும் தொழிற்சாலையையும், பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களின் தமிழ் எழுத்துகளை உருவாக்கும் ஒரு எழுத்து தயாரிக்கும் கூடத்தையும் ஏற்படுத்தினார். சீகன்பால்கு தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி இந்து சமய கடவுள்களின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை ஓலைச்சுவடியிலிருந்து, காகிதத்தில் அச்சேற்றி வெளியிட்டுள்ளார். அதே ஆண்டிலேயே மரியாடாரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டு, இருவருமாக சேர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்டனர். தரங்கம்பாடியில், ஆசியாவின் முதல் புராட்டஸ்டண்டு(சீர்திருத்த) தேவாலயமான புதிய எருசலேம் ஆலயத்தை 1718 இல் கட்டியவர். ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்துறையை நிறுவியதில் பெரும் பங்காற்றியவர். பெண்களுக்கான முதல் கல்வி நிலையம், விதவைகளை ஆசிரியர்களாகக் கொண்டு பள்ளிக்கூடம், தையற்பயிற்சி பள்ளி, விடுதிகள் ஆகியவற்றை அமைத்து எளியவர்களின் கல்வி, சமூக முன்னேற்றத்திற்காக அரும்பாடுப்பட்டவர். வெறும் 13 ஆண்டுகளே தரங்கம்பாடியில் வாழ்ந்த அவர், 23.2.1919 இல் இயற்கை எய்தி அவர் கட்டிய ஆலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். சர்வ சமய உரையாடல்களை பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி, மத நல்லிணக்கத்தை பேணிகாத்தவர். கிறிஸ்தவத்தை பரப்புகின்ற பணிக்கு வந்து, அப்பணியை பின்னுக்குத் தள்ளி, தமிழுக்காக உழைத்து தமிழ் நூல்களை காகிதத்தில் அச்சேற்றி, பெரும்பணியை செய்ததோடு, தமிழர்கள், பெண்களின் உரிமைகளுக்காக அக்காலத்திலேயே போராட்டங்கள் பலவற்றை நட்தியவர். சீகன்பால்கு, தரங்கம்பாடி வந்த தினத்தை தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினர் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், புதனன்று அவர் வந்த 319 ஆவது தினத்தையொட்டி, தமிழ் சுவிசேஷே லுத்தரன் திருச்சபையின் பேராயர் முனைவர். கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. கடற்கரையையொட்டி சீகன்பால்கு கப்பலில் வந்து இறங்கிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் திருச்சபையினர், ஆயர்கள், பயிற்சி ஆயர்கள், டி.இ.எல்.சி கல்வி நிறுவனத்தினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மலர்வளையம் வைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பாடல்களை பாடியவாறு பேரணியாக வந்து, தமிழறிஞர் சீகன்பால்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சிகளில், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், புதிய எருசலேம் ஆலய ஆயர் சார்லஸ் எட்வின் தாஸ், தபேமாலு கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார், ஆயர்கள், பள்ளி தலைமையாசிரிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், திருச்சபையினர் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து பேராயர். கிறிஸ்டியன் சாம்ராஜ் செய்தியாளர்களிடம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் சீகன் பால்கு-வுக்கு அரசு சார்பில் நினைவரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், விரைவில் நினைவரங்கப் பணிகளை தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், லண்டன் மியூசியத்தில் உள்ள சீகன் பால்கு, முதன் முதலில் அச்சடித்த பைபிளின் பிரதியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.