கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் சிபிஎம், வாலிபர், மாதர் சங்கம் முறையீடு
சேலம், அக். 22- சேலம் மாநகரம், சாமிநாதபுரம் பகுதியில் கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சமூக விரோதிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இணைந்து பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் முறையீடு செய்தனர். சாமிநாதபுரம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா போதையில் இருக்கும் சில சமூகவிரோதிகள் பொதுமக்களை அச்சுறுத்துவது, தாக்குதல் நடத்துவது, பொது இடங்களில் ஆபாசமாகப் பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது, வீடுபுகுந்து தாக்குவது, வாகனங்களில் வேகமாக வந்து மோதி விபத்தை ஏற்படுத்துவது, ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவது, பொதுமக்களின் வாகனங்களைச் சேதப்படுத்துவது, பெண்களைக் கேலி செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இத்தகைய செயல்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தச் சமூக விரோதிகளை உடனடியாகக் கட்டுப்படுத்தக் கோரி, சிபிஎம் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் சார்பில் பொதுமக்களைத் திரட்டி ஊர்வலமாகச் சென்று பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த முறையீட்டின்போது, சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என். பிரவின்குமார் உட்பட மாதர் சங்கத்தினர், வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
