2 விகிதங்களாக ஜிஎஸ்டி வரி விதிப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
புதுதில்லி, ஆக. 21 - நாட்டில் தற்போது ஜிஎஸ்டி வரி விகிதம் 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என 4 அடுக்குகளாக உள்ளது. இதில், 12 சதவிகித வரி விதிப்பில் உள்ள பொருட்களை 5 சதவிகிதத்தின் கீழ் கொண்டு வரவும், 28 சதவிகித வரி விதிப்பில் உள்ள 90 சதவிகித பொருட்களை 18 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட மாநில அமைச்சர்கள் குழு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை அன்று தில்லியில் நடை பெற்றது. மாநில அமைச்சர்கள் குழுவின் தலைவரும் பீகார் துணை முதலமைச்சரு மான சாம்ராட் சவுத்ரி தலைமையில் நடை பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒன்றிய அரசின் புதிய ஜிஎஸ்டி திட்டத்தை ஏற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக இது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்மொழியப்படும். அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடை பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது இது அங்கு முன்மொழியப்படும். அங்கும் இதற்கான ஒப்புதல் கிடைத்தால், இதன் மூலம் பல்வேறு பொருட்கள் மீதான வரி குறையும் வாய்ப்பு உருவாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.