பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், செப். 16- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் பருத்தி மறைமுக ஏலம் நடந்து வருகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடந்து வரும் பருத்தி மறைமுக ஏலத்தில், இதுவரை 12 வாரம் நடந்த பருத்தி ஏலத்தில், பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 4,017 விவசாயிகள் பங்கேற்று, 1872 மெட்ரிக் டன் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ரூ.15 கோடியே 90 லட்சத்திற்கு ஏல விற்பனை நடந்துள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் அடங்கிய டெல்டா மாவட்டங்களில் பாபநாசத்தில்தான் பருத்தி வரத்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.