சண்டிகர், மே 24 - பஞ்சாப் மாநில அரசு ஒப்பந்தங்களில் 1 சதவிகிதம் கமிஷன் லஞ்சம் கேட்டதாக பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்சிங்லா மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி, முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் விஜய்சிங்லா தற்போது கைதும் செய்யப்பட்டுள்ளார். தில்லியைத் தொடர்ந்து பஞ்சாப்பிலும் ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி, ஊழல் ஒழிப்பே தங்களின் பிரதானக் கொள்கை என்று முழங்கி வந்தது. லஞ்சம், ஊழல் தொடர்பாக யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்று முதல்வர் பகவந்த் மான் கூறியிருந்தார்.
இதற்காக, ‘1031’ என்ற தனி ஹெல்ப்லைன் எண்ணையும் அறிவித்தார். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், அவர்களின் ஆடியோ/வீடியோ கிளிப்பை பதிவு செய்து எனது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்புங்கள் என்று கூறினார். ஆம் ஆத்மி ஆட்சியில், பஞ்சாப்பில் இனி யாரிடம் இருந்தும் பணம் பறிக்கப்படாது, எந்த அதிகாரியையும் அமைச்சர்கள் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் ஜம்பமாக கூறியிருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்கு உள்ளேயே ஆம் ஆத்மி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்சிங்லா ஊழல் அரசு ஒப்பந்தங்களில் 1 சதவிகிதம் கமிஷன் கேட்கிறார் என்று புகார்கள் குவிந்தன. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இந்தப் பின்னணியில், விஜய்சிங்லாவை அமைச்சரவையில் இருந்து நீக்கி, முதல்வர் பகவந்த் மான் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், ஊழல் புகார்களுக்கு ஆதாரங்களும் இருந்ததால், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜய்சிங்லா தற்போது கைதும் செய்யப்பட்டுள்ளார்.