tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

வீரர், வீராங்கனைகள் வாழ்த்தி வழி அனுப்பி வைப்பு

திருச்சிராப்பள்ளி, செப். 11-  6 ஆவது தென் இந்திய ஜூனியர், சீனியர் ரோல்பால் போட்டி, செப். 13, 14 தேதிகளில் கேரளாவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் தமிழ்நாடு அணி வீரர் வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம், கடந்த 5 நாட்கள் திருச்சி கே.கே. நகரில் உள்ள சாய்ஜி ரோல்பால் அகடாமியில் நடைபெற்றது.   போட்டியில் பங்கேற்க, கேரளாவிற்கு வியாழனன்று ரயில் மூலம் சென்ற வீரர், வீராங்கனைகளை, தென்னிந்திய ரோல்பால் ஒருங்கிணைப்பாளர் எம்.பி.சுப்பிரமணியம், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோசியேஷன் செயலாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவர்கள் சரவணன், பிரேம்நாத்,  பொருளாளர் ராஜசேகர், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மற்றும் சாய்ஜி அகடாமி பயிற்சியாளர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

சாலையை தரமாகப் போட  மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

பாபநாசம், செப். 11-  அய்யம் பேட்டை அடுத்த மேல வழுத்துரிலிருந்து உள்ளிக்கடையை இணைக்கின்ற குடமுருட்டி ஆற்றின் மீதான பாலத்திலிருந்து உள்ளிக்கடை செல்கின்ற ஒரு கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளை சிரமப்படுகின்றனர்.  இந்தச் சாலை வழியே ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலை வழியே இளங்கார்குடி, நாயக்கர் பேட்டை, கார்த்திகைத் தோட்டம் வழியாக பாபநாசம் படுகை புதுத்தெருவைச் சென்றடையலாம். உள்ளிக் கடையைச் சேர்ந்த மக்கள் அய்யம்பேட்டை வருவதற்கு இந்தச் சாலையைத் தான் பயன்படுத்துகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி இந்தச் சாலையை விரைந்து தரமாகப் போட மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவையாறு  அரசு இசைக் கல்லூரியில்  பகுதிநேர நாட்டுப்புற கலை  பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர், செப். 11 -  தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை 30.9.2025 வரை தொடர்ந்து நடைபெறும்.  பகுதிநேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சியில் திருவையாறு இசைக் கல்லூரி மையத்தில், இசை நாடகம், கும்மி கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் சிலம்பாட்டம் ஆகிய 4 கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.  இப்பயிற்சியானது திருவையாறு, இசைக் கல்லூரி வளாகத்தில் பிரதி வாரம் 2 நாட்கள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை பகுதிநேரமாக நடைபெறும். ஓராண்டு கால சான்றிதழ் படிப்பாக நடத்தப்படும், இப்பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 17 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் சேரலாம். இப்பயிற்சிக்கு ஓராண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.500.  மேற்காணும் தகுதியுடன் இக்கல்லூரியில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சியில் சேர விருப்பம் தெரிவிப்பவர்கள் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள இசைக் கல்லூரியை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 04362 261600, 9791466148 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர், பழங்குடியின  இளைஞர்களுக்கு ஒளிப்பதிவு பயிற்சி

பெரம்பலூர், செப். 11-  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள்.  இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு 04328-276317 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.

புன்னைநல்லூர்  முருகன் கோவிலில்  ஐம்பொன் சிலைகள் கொள்ளை

தஞ்சாவூர், செப்.11 -  தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூரில் பழமையான முருகன் கோவிலில் மூன்று ஐம்பொன் சிலைகளும், ஒரு வெண்கல கலசமும் கொள்ளை போனது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே 200 ஆண்டுகள் பழமையான பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலி்ல் கத்தரிநத்தத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (37) பூஜைகளை செய்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவிலுக்குள் சென்று பார்த்த போது, அங்கு கிரில் கேட்டு வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒன்றேகால் அடி உயர முருகன் சிலை, தலா ஒரு அடி உயரத்தில் வள்ளி- தெய்வானை சிலைகள், வெண்கல கலசம் என ரூ.3.50 லட்சம் மதிப்பிலான சிலைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.  கொள்ளையர்கள் வெல்டிங் மிஷின் மூலம் கிரில் கேட்டை உடைத்து சிலைகளை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து சதீஷ்குமார் தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்துக்கு அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.