tamilnadu

img

புதுயுக நாயகன் தோழர் மார்க்ஸ் - எஸ்.கார்த்திக்

“நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயா ராவோம்; ஓய்வும் இல்லை, சோர்வும் இல்லை”. இது பள்ளி மாணவர் கார்ல் மார்க்ஸின் பதின்பருவத்து கவிதை வரிகளில் ஒன்று. பெரும் சமூக விளைச்சலுக்கு ஒத்திகை பார்த்த எழுத்துகளை எழுதிக் குவித்த - சட்டகங்களுக்குள்ளோ, விதிகளுக்குள்ளோ அடைக்க இயலாத மாணவராக அவர் எப்போதும் இருந்திருக்கிறார். பள்ளிக்காலத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது கூட மொத்த சமூகத்திற்குமான சிந்தனையை எண்ணியதாக அவரின் காலம் நகர்ந்துள்ளது. அவர் வாழ்ந்த நகரின் புறவியல் சமூகச் சூழலும், குடும்பத்தின் அகவியல் நல்லெண்ணச் சிந்தனைகளும் பள்ளிக்கால மார்க்சை இயக்கி வந்துள்ளன. பள்ளிக்காலத்தில் கலகங்களை ஏற்படுத்திய தனது நண்பர்களை பள்ளியை விட்டு நீக்கிய ஆசிரியர்களிடம் முகம் கொடுக்காமலும் அதற்கெதிரான சிந்தனைத் தெறிப்பையும் உருவாக்கியவராக மார்க்ஸ் இருந்திருக்கிறார்.

புகழுக்கு இரையாகாதவர்

டிரியர் நகரத்தின் அரசியல் சூழலும், அங்கு நிலவிய புதிய விடுதலைக்கான முழக்கங்களும் அவரை ஈர்த்திருந்தன. தெரிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் பதில்களின் பக்கம் ஒருபோதும் செல்லாதவர். புதிய கோணத்தில் சிந்திக்கும் புதுயுக நாயகனாக எப்போதும் இருந்தவர். சட்டவியலில் தனது கல்லூரிப் படிப்பை பயின்ற பிறகு சட்டவியலின் தத்துவத்தையும், தத்துவ ஞானத்தையும் கற்றுத் தேர்ந்தவர். நண்பரைப் போன்றதோர் தந்தைக்கு என தனது கல்லூரி ஆய்வுரையை தந்தைக்கு சமர்பித்தவர். அதன் பின் தான் படித்து உள்வாங்கிய ஒவ்வொன்றின் மீதும் தானே கேள்வி எழுப்பி அதை உடைத்துவிட்டு அதன் முழுமையைக் காண வேண்டுமென வாழ்வெங்கும் செயல்பட்டவர். எதிலும் சுய திருப்திக்கும், புகழுக்கும் இரையாகாத பண்பட்டவர். 42 வயதில் மனைவிக்கு காதல் ரசம் சொட்டும் கவிதைகளை எழுதிக் குவித்த தனிப்பெரும் காதலன். தந்தையும், தாயும் தன்னைப் பற்றி எவ்வளவு அக்கறை கொண்டாலும் குடும்பத்தின் நிமித்தம் தன்னை எப்படி மாற்ற முனைந்தாலும் அதுகுறித்த சலிப்பின்றி ஆய்வுகளில் மூழ்கிக்கிடந்த வரலாற்றாய்வாளான். “சொர்க்கமும், பூமியும் தம் வழிகளில் போகட்டும் நாம் நிகழ்காலத்தை நேராகப் பார்ப்போம்” என ஜெர்மனியின் அரசியல் மாற்றத்தை பகடி செய்து விமர்சனத்திற்கு உட்படுத்தி யவர். எந்நாளும் சுவை ததும்பும்பேச்சும், கலையும் கைக்கொண்ட எளிய மனிதர்.

ஹெகலிய மயக்கத்திற்கு மருந்து கொடுத்தவர்

ஹெகலின் தத்துவத்தினை படித்து தவித்து மயக்க மனநிலையில் இருந்தவர்களிடம் பரிகாசப்பட்டு கடுமையான விமர்சனைங்களை எப்போதும் வைத்து வந்தவர். ஆனால் ஒரு போதும் அவர்களை புறங்கையால் தள்ளாதவர். அதனாலேயே இளம் டாக்டர்கள் கழகத்தின் முக்கியமான நபராக எப்போதும் இருந்து வந்தவர். ஜெர்மனியின் அறிவுத்துறையினர் அனைவரும் மார்க்சிடம் மாறாப்பிரியம் கொண்டவர்களாக எப்போதும் இருந்தனர். கடவுள் பெயரால் பகுத்தறிவற்ற சிந்தனை உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இளம் ஹெகலியவாதிகளிடம் இருந்து மாறுபட்டு , ஒரு படி முன்னே நகர்த்துவதே நற்பணி என்னும் புரட்சிக்காரனாக எந்நாளும் பணிசெய்தவர். இறுதியில் அவற்றை தட்டையாக அணுகிடாமல் கடவுளின் கருப்பொருளை “ இதயமற்ற உலகின் இதயமாக கடவுள் இருக்கிறார்” எனக் கவித்துவமாய் விதைத்து விட்டுப் போனார். சாக்ரட்டீஸ் துவங்கி அரிஸ்டாட்டில் வரை, டியோகொனிஸ் துவங்கி எம்பிரிகுஸ் வரை படித்து நிறைந்து ஒவ்வொன்றின் கருப்பொருளில் இருந்த  நிரவல்களையும், கருத்து முதல்வாதத்தையும் கண்டுணர்ந்து பொருள் வாதக் கண்ணோட்டத்தினை முன்வைத்தவர். தத்துவஞானம் மதத்துடன் எப்போதும் பொருந்திப் போவதுமில்லை, அதிகார மரபினை ஏற்றுக் கொள்வதுமில்லை என உலகத்திற்கு எப்போதும் விளக்கியபடியே இருந்தார். விட்டில் பூச்சிகளின் விளக்கொளியாக நிற்காதீர்கள் , மெய்யான சூரியனை கண்டடையுங்கள் என வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தையும், இயக்கவி யல் பொருள் முதல் வாதத்தையும் முன்வைத்து பெரும் பணியாற்றினார். தத்துவப் புலமைகளுக்குப் பிறகு ஒரு பிரபல பத்திரிகையின் பணியேற்று அதன் ஆசிரியராக உயர்ந்த போது மார்க்சுக்கு வயது 25 கூட நிறைவு பெறவில்லை.

அரசியல் வெப்பத்தை உருவாக்கியவர்

ஒரு புறம் பத்திரிகைத் தணிக்கையையும் , மறுபுறம் அதிதீவிரக் கருத்துடையோரையும் வைத்துக் கொண்டு குறைந்தபட்ச உரிமையான பத்திரிகை சுதந்திரத்துக்கு இடைவிடாது குரல் கொடுத்தார். சில முக்கிய கட்டுரைகளை எழுதும் போது அவர் வீசிய அரசியல் வெப்பம் அவர் பணியாற்றிய பத்திரிகையை முடக்கும் நிலைக்கு வந்து விட்டது. ஆனால் அந்தக் காலத்தின் அரசியல் நிலைமையில் குறைந்தபட்சம் பத்திரிகை மக்களுக்கு தேவை என்ற தன்மையில் தனக்கு இருந்த ஒரே வருமான வாய்ப்பான ஆசிரியர் பணியினை விட்டு வெளியேறினார். கற்பனாவதிகளிடம் எப்போதும் கடும் கோபம் அவருக்கு உண்டு. கனவுகள் மட்டுமே சிறந்த வாழ்வை தந்துவிடாது என எப்போதும் கூறிவந்தார் மார்க்ஸ். எனவே கற்பனாவாத கம்யூனிஸ்டுகளிடம், சோசலிஸ்டுகளிடமும் இருந்த தத்துவக் குறைகளை எப்போதும் தயக்கமின்றி கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி வந்தார். அது இறுகித் தெறித்து விஞ்ஞானப் பூர்வமான கம்யூனிசத்தை கட்டமைத்திட  மாபெரும் உழைப்பினை கொடுத்திட வேண்டி வந்தது. பிரான்சில் ஜென்னியை திருமணம் செய்து குடியேறிய பிறகு தொழிலாளி வர்க்க குழுக்களோடு நெருங்கிப் பழகி தொடர்புகளை உருவாக்கிக் கொண்டார். மார்க்ஸ் குடும்பத்தால் ஜெனரல் என அன்போடு அழைக்கப்பட்ட ஏங்கெல்ஸ்சின் கடிதமும், அத்தோடு எப்போதும் வரும் பண விடையுமே மார்க்சை  எப்போதும் தாங்கிப் பிடித்து வந்தது. பிரான்சின் அறிவுத்துறையினருடனும் பிரபலமான வராக மார்க்ஸ் மாறினார். எப்போதும் நண்பர்களுக்காக திறந்திருக்கும் மனதோ டும், வீட்டையும் கொண்டவராக இருந்தார்.

அரசு என்பது...

“எழுத்தாளன் வாழ்க்கை நடத்துவதற்காகவும், எழுதுவதற்காகவும் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே, ஆனால் அவன் வாழ்வதும் எழுதுவதும் சம்பாதிப்பதற்காகவே இருந்துவிடக் கூடாது” என்பதில் எப்போதும் உறுதியோடு இருந்தவர் அவர். கொண்ட கொள்கைப் பூர்வமான உறுதிகளில் ஒருதுளி கூட மாறாதவர். அரசு என்பது வெளித்தோற்றத்துக்கு மட்டுமே மக்களின் பாதுகாவலராக இருக்கும்;  அது மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது கற்பனை என்றார். அரசு குறித்த தெளிவான வரையறையோடும் மாற்றுச் சிந்தனைகளோடும் இருந்தார். புரட்சிகரான தத்துவத்தைப் படைப்பதற்கு, உண்மையான போர்முழக்கத்தை கண்டுபிடிப்பதற்கு கடந்த காலத்தில் நடைபெற்ற வர்க்கப் போராட்டங்களின் வரலாற்றைப் பொதுமைப்படுத்த வேண்டும் என கூறியவர் மார்க்ஸ். அதில் வெற்றிபெற்றே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனம் , அரசியல் பொருளாதாரம் என்னும் பெருஞ்சொத்து களை சமூகத்தின் கைகளில் ஒப்படைத்துச் சென்றார். உரிமைகள் பறிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்கமே பாட்டாளி வர்க்கம் என்பதில் எப்போதும் உறுதியாய் இருந்தார். பாட்டளி வர்க்க விடுதலையே மக்கள் விடுதலை என உரத்து முழங்கினார்.

வறுமையைப் படைத்த உழைப்பு

முதலாளிகளுக்கான தொழிலாளியின் உழைப்பு அற்புதமான பொருட்களைப் படைக்கும் போது , தொழிலாளியின் வறுமையையும் சேர்த்தே படைக்கிறது என்னும் பொருளாதாயச் சிந்தனையை உலகின் முன் வைத்தார். மனித உணர்வுகள் இயந்திரத்தின் ஒரு பகுதியாக மாற்றப்படுவதின் அவலத்தினை எடுத்துரைத்தார். மற்ற தத்துவ ஞானிகளைப் போல உலகினை வியாக்கினம் செய்வது அல்ல; அதை மாற்றுவதே தற்போதுள்ள தேவையென முதல் அகிலத்தினை ஒருங்கிணைத்து உலகப் பாட்டாளிகளின் விடுதலைக் குரலானார். நூற்றுக்கும் குறைவான கம்யூனிஸ்ட் கழகத்தினரால் துவங்கப்பட்டு வெளியிடப்பட்ட மார்க்சியத் தத்துவம் தரும் ஒளியை இன்று உலகம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட புகழ் மற்றும் அந்தஸ்தை அடைவதற்காக புரட்சிகரமான முழக்கங் களை உபயோகிப்பது பாட்டாளி வர்க்க  லட்சியத்துக்கு செய்யும் மிகப் பெரிய துரோ கம் என எப்போதும் கூறுபவர். நபர்களை மதிப்பிடுவதிலும் தன்னிகரற்றவர் மார்க்ஸ். நண்பர் ஒருவரின் கடிதத்திற்கு ஏன் பதில் எழுத முடியவில்லை என்பதற்கு இவ்வாறு கூறுகிறார் அந்த மாமனிதர்: “ஏன் முடியவில்லை எனில், நான் மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கணத்தையும் எனது புத்தகத்தை நிறைவு செய்வதற்கு செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அது பெரிய தியாகங்களை கோரிவிட்டது . எனவே அதை முடித்து சமூகத்திற்கு அளிப்பதே நலம்.  எனவே அதை நிறைவு செய்து விட்டு இப்போது உங்களுக்கு பதில் எழுது றேன்.”  இந்த வார்த்தைகளின் உண்மை யொளியில் சிறு பலன் கூட தனது தனிப்பட்ட நலன்களுக்கானதாய் இல்லாதிருந்தவர். லெனின் கூறியதைப் போல வறட்டுக் கோட்பாடாக அல்லாமல் வாழ்வியல் நெறியாக வளர்ந்து நிற்கிறது மார்க்சியம். அவருடைய பெயரும் பணியும் யுகங்களை தாண்டியும் நிலைத்திருக்கும். தன் துயரங்களை எப்போதும் நினைத்திராத ஒரு பெருமகன் மார்க்ஸ். 

 



 

 

;