அருவி வந்து கொட்டும்
அழகு கண்ணில் சொட்டும்
உருவில் சிறிய சிட்டும்
உயர்ந்த கிளையை எட்டும்!
பூக்கள் பொன்னைப் பூக்கும்
பூத்துத் தேனைத் தேக்கும்
ஆர்க்கும் வண்டு பார்க்கும்
அமர்ந்து தேனை ஈர்க்கும்!
தோகை மயிலும் ஆடும்
சோலைக் குயிலும் பாடும்
கூகை குழறக் கூடும்
கோட்டில் அணிலும் ஓடும்!
தென்றல் பூவைத் தீண்டும்
தேனி மலரைத் தோண்டும்
வந்து வந்து மீண்டும்
மதுவைத் தேனி ஈண்டும்!
குரங்கு கனியை வீசும்
கூடிக் கிளிகள் பேசும்
மரங்கள் காட்டும் பாசம்
மாலை பொன்னைப் பூசும்!
மேகம் வானில் செல்லும்
மினுக்கும் வான வில்லும்
மோதும் கடலும் துள்ளும்
முத்தை வாரித் தள்ளும்!
காலை கிழக்கில் மின்னும்
கதிரே உலகக் கண்ணும்
கோல நிலவுப் பெண்ணும்
குறைந்து வளர எண்ணும்!
காடு விலங்கு வீடு
காணும் மலைகள் பீடு
ஓடும் ஆற்றைப் பாடு
உலகம் இயற்கை வீடு!