tamilnadu

img

ஒன்றிய அரசின் கருப்புச் சட்டத்தை எதிர்ப்போம் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

ஒன்றிய அரசின் கருப்புச் சட்டத்தை எதிர்ப்போம்  நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, ஆக. 21- “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டத்தை கடந்த காலங்களைப் போலவே எதிர்த்து முறியடிப்போம்!” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் வியாழக்கிழமை (ஆக.21) அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் அ. ரகுமான்கான் எழுதிய, “நியாயங்களின் பயணம்”, “மெளனமாய் உறங்கும் பனித்துளிகள்”, “உலகமறியா தாஜ்மஹால்கள்”, “பூ... பூக்கும் இலையுதிர் காலம்”, “வானம் பார்க்காத நட்சத்திரங்கள்” ஆகிய 5 நூல்கள் மற்றும் “இடி முழக்கம்” அ. ரகுமான்  கான் சட்டமன்றப் பேருரைகள்- ஆகிய 6 நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “நாட்டைச் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய ஒரு கருப்புச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர்” என்று குறிப்பிட்ட முதல்வர், “இதற்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் என சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தார்கள். அப்போதெல்லாம் இந்த சட்டங்களை திமுக எப்படி கடுமையாக எதிர்த்ததோ, அதேபோல இந்த கருப்பு சட்டத்தையும் எதிர்ப்போம்” என்று உறுதியளித்தார். மறைந்த அமைச்சர் அ.ரகுமான்கானின் சிறப்பைப் பற்றி விரிவாகப் பேசிய முதல்வர், “அவர் ஒரு ஸ்டார் பேச்சாளர். சட்டப்பேரவையில் அவரது பேச்சு இடி முழக்கமாகும், தமிழ்நாடு முழுவதும் வெடிமுழக்கமாக எதிரொலிக்கும்” என்று பாராட்டினார். 1943-ல் தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்த ரகுமான்கான், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்து, 1965-ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தில் பங்கேற்றவர் என்று நினைவுகூர்ந்தார். சிறுபான்மை மக்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்றும், குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தின் மக்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும் என்றும் முதல்வர் உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் அக்பர் அலி, வாசுகி, முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், நக்கீரன் கோபால், ஜெ.எம். ஆருண், திருப்பூர் அல்தாப், முன்னாள் எம்.பி. முகமது சகி, சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஜோ. அருண், ரகுமான்கான் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.