tamilnadu

img

மனச்சாட்சியை உறங்க செய்து ஆட்சியா?

சென்னை, மார்ச் 23- மனச்சாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது  என்று ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டு இணை வழி சூதாட்டத்தைத் தடை செய்தல்  மற்றும் இணையவழி விளையாட்டுக் களை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி வைத் தார். அந்த சட்டமசோதாவை வியா ழனன்று (மார்ச் 23) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்தார். அப்போது அவர் உரையாற்று கையில்,“ மிகவும் கனத்த இதயத் தோடு பேசுகிறேன். இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படி யான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயர மான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது”என்றார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூ.17 லட்சத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளை ஞர் கடிதத்தில் “தயவு செய்து ஆன் லைன் ரம்மியை தடை செய்யுங்கள். என்னைப்போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டு விட்டுச் செல்லக்கூடாது. இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது” என்கிற  உருக்கமான பகுதிகளை சுட்டிக் காட்டிய முதலமைச்சர், இதுவே கடைசி தற்கொலையாக இருக்கட்டும் என்றும் கூறியிருப்பதையும் எடுத் துரைத்தார்.

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து 10,735 மின்னஞ்சல்கள் மூலம் கருத்துகள் பெறப்பட்டன. எதிராக 25 பேர் மட்டுமே  கருத்து கூறினர். ஆசிரியர்கள், மாண வர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதன்பிறகே தடைச் சட்டம் கொண்டு  வரப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத் தும் அனைத்து அம்சங்கள் குறித்தும்  ஆராயப்பட்டது. ஆனால், ஆளுநருக்கு  அனுப்பி வைத்து 131 நாட்கள் பிறகு திருப்பி அனுப்பி வைத்தார். அவர் கேட்ட விளக்கத்திற்கு 24 மணி நேரத்திற்குள் பதில் தரப்பட்டது. சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதும், மக்களை பாதுகாப்பதும், மாநில அரசின் மிக முக்கியமான கடமை. மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது”என்று ஆளு நருக்கு பதிலடி கொடுத்தார். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டது. தற்கொலைகளை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சட்டத்தை கையில் வைத்திருக்கும் இந்த அரசுக்கு  இருக்கிறது. எனவே, மனித உயிர்களை  பழிவாங்கும் ஆன்லைன் சூதாட்டங் களை ஒடுக்குவதில், இதயம் உள்ள வர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்காது, இருக்கவும் கூடாது என்றும்  அவர் கூறினார். மாநிலத்திலுள்ள மக்களை காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன். மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க  வேண்டும். இனி ஒரு உயிர் பறிக்கப் படக் கூடாது, அநியாயம் தொடரக் கூடாது. அனைத்து உறுப்பினர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

;