நெல் குறுவை பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு
பெரம்பலூர், ஜூலை 21- பெரம்பலூர் மாவட்டத்தில் திருந்திய பாரத பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் நெல் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாபு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் 2025 காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர், எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும்போது திருந்திய பாரத பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட காப்பீடு நிறுவனத்தினால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டமானது ஷீமா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியால் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஜூலை 31 ஆம் தேதிக்குள் நெல் குறுவை பயிருக்கு காப்பீடு செய்யவேண்டும். ஒரு ஏக்கருக்கான நெல் (குறுவை) பிரீமியம் தொகை ரூ.770 ஆகும். ஆலத்தூர் வட்டாரத்தில் செட்டிகுளம், வேப்பந்தட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து குறு வட்டங்களும், வேப்பூர் வட்டாரத்தில் வரகூர் குறு வட்டத்தை சார்ந்த நெல் பயிரிடும் விவசாயிகள் இப்பயிர் காப்பீடு திட்டத்தில் இணையலாம். காப்பீடு செய்ய விரும்பும் நெல் குறுவை சாகுபடி விவசாயிகள் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பசலி அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.