சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக பேருந்து வசதி
தஞ்சாவூர், அக். 14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கீழப்புனவாசல், வாடிக்காடு, ராமகிருஷ்ணாபுரத்தில் சுமார் 3000 குடும்பங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் செல்ல அங்கிருந்து 3 கிலோமீட்டர் நடந்து சென்று புனல்வாசல் பகுதிக்கோ, மேல ஓட்டங்காடு பகுதிக்கோ சென்று பேருந்தைப் பிடித்தனர். இந்தப் பகுதியில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, கிராமப் பிரமுகர்கள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து பேருந்து வசதி ஏற்படுத்தித் தர கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இந்த வழியாக பேருந்து இயக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அக்டோபர் 13 அன்று காலை இந்த வழியாக பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழகத்திலிருந்து `ஏ.6’ எண் கொண்ட நகரப் பேருந்து, கட்டணம் இல்லா மகளிர் விடியல் பேருந்தாக இயக்கி வைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நாளொன்றுக்கு போக, வர 6 நடைகள் இயக்கப்படும். இதனை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்து கட்டணம் செலுத்தி, பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்தார்.
