சென்னை, ஜன.8- பஞ்சாப்பில் பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டத்துக்கான நாற்காலிகள் காலியாக இருந்த செய்தி அறிந்த பிறகே அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை மூடி மறைக்கவே பாஜகவினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கபடநாடகம் நடத்துகிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “பிரதமரின் பஞ்சாப் பயணத்தை அரசியலாக்கி, கிடைத்த வரை லாபம் தேடும் முயற்சி சமீபத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே திட்டமிட்ட நாடகமோ? என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. பிரதமரின் பாதுகாப்புப் பணியில் உள்ள எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவினர், 122 கி.மீ. தொலைவுள்ள சாலை வழியாக, பிரதமர் பயணிக்க கடைசி சில நிமிடங்களில் எப்படி அனுமதி அளித்தார்கள்? என்ற கேள்விதான் சந்தேகங்களை விதைத் திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.