tamilnadu

img

சிலிண்டருக்கு ரூ. 50; பெட்ரோல், டீசலுக்கு 80 காசுகள் விலை உயர்ந்தது!

பொதுப்போக்குவரத்து மீது  தொடுக்கப்படும் தாக்குதல்!

சிஐடியு கண்டனம்

மொத்த கொள்முதலுக்கான டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தி யிருப்பது, பொதுப்போக்குவரத்து மீது தொடுக்கப்படும் தாக்குதல் என, ஒன்றிய அரசுக்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.  “டீசலை மொத்தக் கொள்முதல் செய்பவர்களுக்கு டீசல் லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தப்பட்டுள்ளதை இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கண்டிக்கிறது. எதிர்க்கிறது. இது அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பிற மொத்தப் பயனர்கள் மீது நடத்தப்படும் மற்றொரு தாக்குதல் ஆகும். டீசல் விலை உயர்வு பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் மீதும் இதர சேவைகளை பயன்படுத்துவோர் மீதும்தான் சுமத்தப்படும்.  டீசல் விலை உயர்வு சாதாரண மக்களின் வாழ்க்கையை  மேலும் மோச மாக்கும். இது பொதுத்துறை நிறுவனங்கள் மீதான தாக்குதலின் மற்றொரு வடிவ மாகும். செங்குத்தான டீசல் விலை உயர்வை உடனடியாக மோடி அரசு திரும்பப் பெற வேண்டும்” என சிஐடியு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புதுதில்லி, மார்ச் 22 - ஐந்து மாநிலத் தேர்தல்கள் காரணமாக, கடந்த 137 நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை மோடி அரசு உயர்த்தாமல் இருந்து வந்தது.  தற்போது தேர்தல் முடிந்து, அதில் 4 மாநிலங்களில் மீண்டும் பாஜகவே ஆட்சிக்கு- முதல்வர் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்ட பின்னணியில், ஒன்றிய பாஜக அரசு செவ்வாய்க்கிழமை முதல் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலைகளை மீண்டும் உயர்த்த ஆரம்பித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, செவ்வாயன்று லிட்டருக்கு 80 காசுகள் வரையும், வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ. 50-ம் உயர்த்தியுள்ளது. இதன்மூலம் தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 96.21 ஆக உள்ளது. முன்பு ரூ. 95.41 ஆக இருந்தது, டீசல் விலை லிட்டருக்கு ரூ. 86.67-ல் இருந்து ரூ.87.47 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, தில்லியில் மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை (14.2 கிலோ) ரூ. 949.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை கடைசியாக 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி உயர்த்தப்பட்டது. உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்படும் என்பதால், நவம்பர் 4-ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் உயர்த்தப்படவில்லை. தற்போது மீண்டும் விலைகள் உயர ஆரம்பித்துள்ளன.

இந்த புதிய விலை உயர்வின் மூலம், ஐந்து கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர் விலை ரூ. 349 ஆகவும், பத்து கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ. 669 ஆகவும் இருக்கும் என பெட்ரோலிய நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை இப்போது ரூ. 2003.50 ஆக உள்ளது. ஒருபுறம் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தும் மோடி அரசு, மானியத்தை வெகுவாக வெட்டிச் சுருக்கி விட்டது. மோடி அரசு 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிலிண்டர் ரூ. 722-க்கு விற்றபோது கொடுத்த மானியம் ரூ.238.27. அதே சிலிண்டர் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி ரூ. 785-க்கு விற்றபோது கொடுக்கப்பட்ட மானியம் ரூ.124.95. அதாவது மானியத்தை ரூ.114 வெட்டிவிட்டது. அதையும் தற்போது ரூ. 30, 40, ரூ. 60 என பிச்சைக்காசு போல மாற்றிவிட்டதாக இல்லத்தரசிகள் குமுறுகின்றனர். சில நகரங்களில் மானியமே வழங்கப்படுவதில்லை என்றும், மானியம் என்பது மோடியின் மோசடி வேலையாக மாறிவிட்டது என்றும் அவர்கள் கூறுகின்றனர். கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி சிலிண்டர்களுக்கான மானியத் தொகையை நிறுத்தியது குறித்து மட்டும் எதுவும் பேசுவதாக இல்லை. மொத்தமாக கொள்முதல் செய்வோர், தொழில்துறை நுகர்வோருக்கு விற்கப்படும் டீசல் ஏற்கெனவே லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தப்பட்டு இருப்பதும், இந்த செங்குத்தான விலை உயர்வால் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு, பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் சூழல் உருவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.