tamilnadu

img

அரிட்டாபட்டியில் அமைகிறது பறவைகள் சரணாலயம்

மதுரை, ஜூன் 25- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டியில் பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதுபற்றி பறவைகள் நல ஆர்வலர் அ.ரவிச்சந்திரன் கூறிய தகவல்கள்:   மதுரையிலிருந்து 17 கி.மீ தொலை வில் யானைமலைக்கு வடகிழக்கே, திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ் சாலையில் நரசிங்கம்பட்டிக்கு வட மேற்கே அமைந்துள்ளது  அரிட்டா பட்டி மலைக்குன்று. இதை ஒட்டி அமைந்துள்ளது அரிட்டாபட்டி கிராமம். மதுரை மாநகரை ‘வாழும் மூதூர்’ என்று பெருமையாகச் சொல்வதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் அரிட்டாபட்டி கண்மாய். சிதையாத மொழியும், ஊரும், குன்றுமாய் இன்றும் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கும் ஊர் அரிட்டா பட்டி. இங்குள்ள 16-ஆம் நூற்றாண்டில்  உருவாக்கப்பட்ட ஆனைமேல் கொண்டான் கண்மாய் இன்றைக்கும் ‘ஆனைக்கொண்டான் கண்மாய்’ என்று மக்களால் அழைக்கப்படுகிறது. சமணர்கால குகைகள், சமணப் படுகை, மகாவீரர் புடைப்புச் சிற்பம் என்று இன்றளவும் பாரம்பரியச் சின்னங்களை பத்திரப்படுத்தி வைத்தி ருக்கும் அரிட்டாபட்டிக்கு சொல்லச் சொல்லத் தீராத பெருமைகள் உள்ளன. மதுரையின் பாரம்பரியங்க ளை, கதைகளை முழுமையாக உள் வாங்கிக் கொள்ள நினைப்பவர்கள் மிகவும் நிதானமாக எண்பெருங் குன்றங்களையும் அதைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். அரிட்டாபட்டியின் மேற்குப்புறம் கழுகு மலை, கழிஞ்ச மலை, நாட்டார்  மலை, ராமாயி மலை, ஆப்டான் மலை, தேன்கூடு மலை, கூகைகந்தி மலை என ஏழு மலைகள் இருக் கின்றன.

பல்லுயிர் சூழலியல் மண்டலம்

இந்த மலைகளைச் சுற்றி 72 கண்மாய்கள், 200-க்கும் மேற்பட்ட நீர் ஊற்றுகள், நீர் சுனைகள் அமைந்துள் ளன. இத்தகைய நீர் ஆதாரங்க ளால்தான் இங்குள்ள மலைகளைச் சுற்றி மரம் செடி கொடிகள், மூலிகைச் செடிகள், மரங்கள், பல்லாயிரக்கணக் கான பறவைகள், விலங்குகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் குவாரி முதலாளிகள், தொழில் வளர்ச்சி என்ற பெயரில், இந்த ஏழு மலை களையும் உடைத்தெடுக்க முனைந்த போது, வரலாற்றின் தொன்மையைக் கொண்டாடும் அரிட்டாபட்டி மக்கள் ஒன்றிணைந்து, வீரம் செறிந்த போராட்டத்தை நிகழ்த்தி, ஊரைக் காத்து நின்றார்கள். நவம்பர் 2020-ல் அரிட்டாபட்டி ‘பல்லுயிர் சூழலியல் மண்டலம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 275 வகைப் பறவைகளைப் பறவையிய லாளர்கள் இந்தப் பகுதியில் அடையாளம் கண்டிருக்கிறார்கள். 

அரியவகை பறவைகள்

இராஜஸ்தானிலும் தமிழகத்தில் அரிட்டாபட்டியிலும் மட்டுமே ‘லகடு வல்லூறு’ என்கிற அரியவகைப் பற வையினம் காணப்படுகிறது. இந்த வல்லூறு உருவத்தில் சின்னதுதான். ஆனால், மதுரைத் தமிழில் சொன்னால் ‘சண்டியர் மாதிரி’ யாரை யோ உதைக்கப் போகும் பாவனையில் எப்போதும் பின்புறக் காலைத் தூக்கிக் கொண்டே நிற்குமாம். அதனால், உள்ளூர் மக்கள் இந்தப் பறவையை ‘சண்டியர்’ என்றே அன்போடு அழைக் கின்றனர். மிகவும் அரிதிலும் அரிதான சிவப்பு வல்லூறு இங்குள்ளது. ஒரு மணி நேரத்தில் 389 கி.மீ. கடக்கும் திறன் படைத்தது. அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கும் இங்குள்ளது. ‘தற்போது இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. முதற் கட்டமாக கடந்த ஒரு வாரமாக மதுரை மாவட்ட வருவாய்த்துறை யினர் சரணாலயம் பகுதிகளை அடை யாளம் கண்டு அளவீடு செய்து வருகின்றனர். இவர்களோடு வனத் துறையினரும் இணைந்துள்ளனர். அளவிடும் பணி முடிவடைந்தவுடன் அரிட்டாபட்டி ஊராட்சியில் இந்த நிலங்களை ஒப்படைப்பதற்கான தீர்மா னம் நிறைவேற வேண்டும். இப் பணி கள் முடிவடைந்தவுடன் அரிட்டாபட்டி  அதிகாரப்பூர்வமாக பறவைகள் சர ணாலயப் பகுதியாக அறிவிக்கப்படும்.

 

;