அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியருக்கு சிறந்த சமூக சேவையாளர் விருது
தஞ்சாவூர், செப்.27 - புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிஃபா (National Integrated Forum Of Artists And Activists) 25-ஆவது வெள்ளி விழா நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அகமது கபீருக்கு “என் கம்யூனிட்டி சாம்பியன் அவார்டு” வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருது, அவருடைய சமூக சேவைகள் — குறிப்பாக ரத்ததானம் மற்றும் கல்வித் துறையில் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டது. மேலும், சிபிடி (CBD), பிப்ட்டோ போன்ற சமூக அமைப்புகள் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய பங்களிப்புகளும் சிறப்பிக்கப்பட்டன. இந்த விழாவில் மொரீசியஸ் நாட்டின் ஜனாதிபதியின் பிரதிநிதி, ஜப்பான் மற்றும் ரஷ்ய தூதுவர்கள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான சிவ் கேரே, நிஃபாவின் நிறுவனர் பிரித்பால் சிங் பன்னு ஆகியோர் விருதுகளை வழங்கினர். பேராசிரியர் செய்யது அகமது கபீர் தனது நன்றியை தெரிவிக்கையில், “இந்த விருது எனக்கு மட்டும் அல்ல, என்னை சமூக சேவையாளனாக உருவாக்கிய காதிர் முகைதீன் கல்லூரி, சிபிடி, பிப்ட்டோ, லயன்ஸ் கிளப் ஆகிய சமூக தளங்களுக்கான அங்கீகாரம்” என்றார். கஜா புயல் வீசிக் கொண்டிருந்த நேரத்தில் 17 உயிர்களை காப்பாற்றிய அவரது துணிச்சலான செயல்பாடும் இவ்விருது வழங்கப்பட்ட முக்கிய காரணிகளில் ஒன்றாகும். விழாவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும், அந்தமான், நிக்கோபார், டாமன், டையூ போன்ற பிராந்தியங்களிலிருந்தும் வந்த சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
