என்னம்மா.. காலைலயே பரபரப்பா இருக்க..?
அங்கிள்.. தேர்வுக்கு விண்ணப்பம் போடணும்..
பத்து நாளைக்கு முன்னாடியே போனியே..
ஆமா... எல்லாத்தையும் எடுத்துட்டுதான் போனேன்.. ஆனா, அன்னிக்கு 13ஆம் தேதி.. அதனால பண்ணாம திரும்பிட்டேன்.. 13னா ராசியில்லாத நம்பராச்சே..
எட்டிப் பார்த்த அம்மா, கிளம்பிப் போனவள இவங்க பாட்டிதான் கூப்புட்டு விட்டுச்சு..
ஆமா, அங்கிள்... அன்னிக்கு வேற ரெண்டு பேரு பண்ணிட்டாங்க.. இந்த 13ஆம் நம்பர எதுக்கு ராசியில்லைனு சொல்றாங்க.. அதோட நிக்கல.. பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு அன்னிக்கு அனுப்புனாங்க.. பண்ண முடியாமத் திரும்புனேன்..
பல பேரும் அத நம்புறாங்க.. ஒரு எம்.பி. ஜெயிச்சு தில்லிக்குப் போனாரு.. அவருக்கு ஒரு வீடு குடுத்தாங்க.. வீட்டு நம்பர் 13.. வேண்டவே வேண்டாம்னுட்டாரு. வேற வீடு இல்லைனு சொன்னாங்க.. இவர் என்ன பண்ணுனாரு தெரியுமா..?
வாடகை வீடுதான் சரின்னு போயிட்டாரா..?
இல்ல. 13ஆம் நம்பர அழிச்சுட்டு 12ஏனு எழுதிக்கிட்டாரு.. நம்ம ஊருல மட்டுமில்ல. உலகத்துலயே பெரிய பணக்கார நாடுனு எதச் சொல்றாங்க..
பாத்தீங்களா... சந்தடி சாக்குல கேள்வி கேக்குறீங்க.. உலகத்துலயே அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி 25 டிரில்லியன் டாலர் அமெரிக்காலதான். 18 டிரில்லியன் டாலர்னு சீனா ரெண்டாவது இடம்.. நாம அஞ்சாவது இடம்.. ஆனா 2024ல தோராயமா 3.7 டிரில்லியன் டாலர்.. இடைவெளி ரொம்பவே அதிகம்..
டிரில்லியன்னா என்ன..?
என்ன அங்கிள்.. ஒரு லட்சம் கோடி... பில்லியன்னா 100 கோடி.. மில்லியன்னா பத்து லட்சம்..
அமெரிக்காவுல என்ன நடக்குன்னா.. 13 ஆம் தேதிக்கான ரயில், விமான டிக்கெட்லாம் பல முறை ரத்து பண்றாங்களாம்.. வர்த்தகம் பண்றது குறைவு.. இதனால 100 பில்லியன் டாலர் ஒரு நாள்ல மட்டும் இழப்பாம்..
நல்லதா எதுவுமே 13ல நடக்கலியா..?
நெறய நடந்துருக்கு.. நம்ம சட்டைல பட்டன் போடுறோம்ல.. இத ஜெர்மனிக்காரங்க 13ஆம் நூற்றாண்டுலதான் கண்டுபிடிச்சாங்க.. கண் கண்ணாடிய இத்தாலிக்காரங்களும், தீபாவளிக்கு நாம விடுவோமே ராக்கெட்.. அத சீனாக்காரங்களும் இதே நூற்றாண்டுலதான் கண்டுபிடிச்சாங்க..
எல்லாம் வெளிநாடாச் சொல்றீங்க..?
நம்ம 13வது ஜனாதிபதி யாருன்னு தெரியுமா..?
ம்ம்ம்ம்ம்.. பிரனாப் முகர்ஜி..
ஆமா.. அவரு அஞ்சு வருஷம் முழுசா பதவில இருந்துட்டுதான் போனாரு.. சரி, 13வது துணை ஜனாதிபதி யாரு..?
இதக் கேப்பீங்கன்னு நெனச்சேன். யோசிச்சுட்டுதான் இருந்தேன். டக்குனு நினைவுக்கு வரல.
வெங்கய்யா நாயுடு.. அவரும் அஞ்சு வருஷம் முழுசா பொறுப்புல இருந்தாரு.. இப்பவும் நல்லாதான் இருக்காரு.. இதாவது பரவாயில்ல.. சீனாவுல 13ஆம் நம்பர்னா ராசியாம்..
போச்சா.. அத நீங்க நம்புறீங்களா அங்கிள்..
இல்ல.. 13ஆம் நம்பர ராசியில்லேனு சொல்றது எப்படி தப்போ, அது மாதிரிதான் ராசின்னு சொல்றதும்..
உண்மைதான், அங்கிள். ஆனா, நெறயப் பேரு நம்புறாங்களே..
நம்ம அரசியல்சட்டத்துலயே அறிவியல் மனப்பான்மைய வளர்க்கனும்னு எழுதி வெச்சுருக்குறதே அவங்களுக்காகத்தான்..
எழுதி வெச்சா மட்டும் போதுமா.. 1961லயே வரதட்சணை தடுப்பு சட்டம் வந்துருச்சு.. மனுஷன மனுஷனா மதிக்கணும்னு.. அரசியல் சட்டப்பிரிவு 17 என்ன சொல்லுது.. தீண்டாமைய ஒழிக்குது.. அது தண்டனைக்குரிய குற்றம்னு தீண்டாமை(குற்றங்கள்) சட்டம், 1955 சொல்லுது.. ஆனாலும் இதெல்லாம் இன்னும் இருக்குதே..
நீ சொல்றது சரிதான்... சட்டம் போட்டா மட்டும் போதாது.. பட்டுக்கோட்டையார் பாட்டுல சொல்வாருல்ல..
இருங்க.. .இருங்க அங்கிள்... திருடராய் பாத்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... சரியா..
அட, சூப்பர்.. இதெல்லாம் படிச்சிருக்கியா..?
தேர்வுல இது மாதிரி வரிகளக் குடுத்து, யாரு எழுதுனதுன்னு கேப்பாங்க..
இவ்வளவு தயாரிப்புல இருக்குற நீ, 13ஆம் தேதி வேண்டாம்னு சொன்னதுக்காக திரும்பி வர்றதா..?
இன்னிக்கு மதியம் 1 மணிக்கு, அதான் 13 மணிக்குதான் பண்ண முடியும்னாலும் பண்ணிட்டு வந்துர்றேன்... பை பை அங்கிள்..