நவீன வசதிகளுடன் காட்சியளிக்கும் பச்சலூர் அரசு பள்ளி
ஜி. ராமகிருஷ்ணன் பாராட்டு
அறந்தாங்கி, ஆக. 18- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் பச்சலூர் அரசு நடுநிலைப்பள்ளி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பசுமையாக, சோலையாக காட்சியளிக்கும் பச்சலூர் அரசு நடுநிலைப்பள்ளியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் பார்வையிட்டு பாராட்டினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியை தலைமை ஆசிரியர் முனைவர் பி.ஜோதிமணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மராமத்து பணி மற்றும் வண்ணம் பூசப்பட்டது. அனைத்து வகுப்பறைகளிலும் குளிர்சாதனம், இணையதள வசதியுடன் கூடிய தொடுதிரை, கணினி, மின்விசிறிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கற்றல் உபகரணங்களை பாதுகாக்க பீரோ, இருக்கைகள், ஸ்மார்ட் தொலைக்காட்சி அனைத்து வசதியுடன் கூடிய கூட்ட அரங்கு, கண்காணிப்பு கேமரா ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அனைத்து மாணவர்களும் புத்த கத்தில் படிப்பதை விட தொடுதிரை மூலம் ஒளி& ஒலி அமைப்பில் மாணவ -மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் கற்கின்றனர். பல நவீன வசதி களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் திங்கள் அன்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறும் போது, சர்வதேச தரத்துடன் அதிநவீன வசதிகளோடு பசுமையான சுற்றுச் சூழலோடு, சிறந்த பண்போடு வாழ்க்கையில் உயர்வான நிலைக்குச் செல்ல, மாணவர்களுக்கு திறன் மேம்பட கற்பிக்கும் பச்சலூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி. ஜோதிமணி மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகம், பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.