tamilnadu

img

பக்கத்தில் உட்கார்ந்து கேள்வி கேட்கும் ‘அயலி’

ஓடிடி தளத்தில் வெளியாகும் படத்தொடர்கள் என்றாலே ஹாரர், கிரைம், வயலன்ஸ் வகை யறாக்களாகத்தான் இருக்கும் என்று வழக்கப்படுத்தப் பட்டிருக்கிறது. அந்த வழக்கத்திலிருந்து மாறுபட்ட தாக வந்திருக்கிறது ‘அயலி’. இல்லை, இதுவும் ஹாரர், கிரைம், வயலன்ஸ் படம்தான். ஆனால் அதையெல்லாம் நிகழ்த்துவது ஆவியோ, அந்நிய சக்தியோ, வெறிபிடித்த கொடூரர்களோ அல்ல. சமூகம். பெண்ணின் பெருமை பேசிக்கொண்டே பெண் செல்ல வேண்டிய தொலைவுகளையும் தொட வேண்டிய உயரங்களையும் குறுக்கி முடக்கிவந்துள்ள சமூகத்தின் ஹாரரும், கிரைமும், வயலன்ஸ்சும் சாதா ரணமானதா என்ன? அதைப்பற்றி 8 அத்தியாயங் களில் பேசுகிற வலைத்தொடர் இது. படத்தின் முன்னுரைப்படி, குலதெய்வம் அயலி உறையும் ஓரு கிராமத்துக் கோயில் வளாகத்திற்குள் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. அதிலும், பூப்படை யாத பெண்கள் மட்டுமே சாமி சிலை இருக்கும் அறைக்குள் நுழைய அனுமதி. பெண் பூப்படைந்து விட்டால் உடனே அவளுக்குத் திருமணம் செய்து வைத்து கணவன் வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். எப்போதோ யாரோ இந்தக் கட்டுப்பாட்டை மீற ஊரைப் பஞ்சம் பற்றுகிறது. அயலியின் கோபம்தான் அதற்குக் காரணம் என்று நம்பும் மக்கள் கிராமத்தைக் காலி செய்து வெளியேறி வேறொரு பகுதியில் குடி யேறுகிறார்கள். அங்கேயும் அயலிக்கு ஒரு கோயிலைக் கட்டி அதே கட்டுப்பாடுகளைக் குடியேற்று கிறார்கள். காலத்தின் ஓட்டத்தில் பள்ளிக்கூடம் உள்ளிட்ட மாற்றங்கள் ஊரில் ஏற்பட்டுவிட்டாலும் கட்டுப்பாடு கள் அப்படியே தொடர்கின்றன. வயதுக்கு வரும் சிறுமிகள் அதற்கு மேல் பள்ளிக்குப் போகக்கூடாது என்ற விதியும் சேர்ந்துகொள்கிறது.

இதெல்லாம் பழைய கதை. இதையெல்லாம் மறுபடியும் மீறுவதற்கு ஒருத்தி வருகிறாள் என்பது புதிய கதை. இதற்கு மேல் கதையை இங்கே சொல்வதற்கில்லை. ஆழமான நிகழ்வுகளுடன் அர்த்தமுள்ள திருப்பங்களுடன் ஒவ்வொரு அத்தியாயமாகப் பார்த்து ரசிக்கவும் படிக்கவுமாகச் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து படிப்பதற்காக தான் வயதுக்கு வந்துவிட்ட உண்மையை இரண்டு ஆண்டுகளாக மறைத்து வைக்கும் தமிழ்ச்செல்வி ஒரு கட்டத்தில் அதை ஊரார் முன்னிலையில் அறிவிக்கிறாள். தன்னை அயலி எதுவும் செய்துவிடவில்லை என்கிறாள். ஆண்கள் ஆத்திரப்படுகிறார்கள். அவளுக்குத் திருமணம் செய்து வைக்கக் கட்டாயப்படுத்துகிறார் கள். திருமண நாளில் பெண்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவளுக்காக ஒரு முடிவெடுக்கிறார்கள். ஊருக்காக வேறு முடிவெடுக்கும் தமிழ் இன்றைய அயலியாய் நம் மனக் கோயிலில் உறைகிறாள். “அந்த அயலியே கூட அன்னிக்கு இப்படியொரு நிலைமை யைச் சந்தித்திருப்பாளோ,” என்பதாக தனது தாயிடம் தமிழ் சொல்கிற இடம் நுட்பமானது. இந்தக் காலத்தில் இது போன்ற கிராமமோ பழக்கமோ இருக்கின்றனவா என்று சிலர் கேட்கலாம். கிராமம் இருக்கிறதோ இல்லையோ தீட்டின் பெயரால் ஆலய நுழைவு உரிமையை மறுக்கிற, பெண்ணின் கல்வியை முடக்குகிற மரபுகள் இருக்கின்றனவே. வழிபடுவதில் மட்டுமின்றி வழிபாட்டை நடத்திவைப்பதிலும் சமத்துவத்தை நிரா கரிக்கிற ஆணாதிக்க அநாகரிகம் அநேக மாக எல்லாச் சமயங்களிலும் இருக்கிறதே. பெண்கள் வந்தால் தீட்டுப்பட்டுவிடும் என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தியதற்காக ஒரு பெண் நடிகர் சமூக ஊடகங்களில் கரித்துக் கொட்டப்படுவதைப் பார்க்கிறோமே! பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கும். ஊரின் பெரிய மனிதர் அபத்தமான கருத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார்.

அப்போது தனது செருப்பில் குத்தி யிருந்த முட்களை அகற்றிக்கொண்டிருக்கிற, வாய் பேச இயலாத ஒருவர் தன் செருப்பை தரையில் தட்டி ஒலி எழுப்புவார். இந்த எளிய நகைச்சுவையில் எவ்வளவு கூர்மையான விமர்சனம்! இத்தகைய நயமான காட்சிகள் எல்லா அத்தியாயங்களுக்கும் சுவை கூட்டுகின்றன. பரிதவித்துத் துடிக்கும் தாய், பாசத்திற்கும் ஊர்க் கட்டுப்பாட்டிற்கும் இடையே அல்லாடும் தகப்பன், பள்ளியின் வெற்றிகர மாணவர்களின் பட்டியலில் தமிழ்ச்செல்வியின் பெயர் இடம்பெற ஊக்குவிக்கும் தலைமையாசிரியர், தனது கனவுகளைப் பறி கொடுத்துவிட்டுக் கதறும் தோழி, எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிற ஆனால் ஒருவரையொரு வர் நேசிக்கிற இரண்டு முதிய பெண்கள்…எல்லோ ரும் நம் குடும்ப உறவுகளாகிப் போகிறார்கள். தமிழ்ச்செல்வியாக அபி நட்சத்திரா தனது நடிப் பால் பார்வையாளர்களின் பக்கத்தில் உட்கார்ந்து நீங்களெல்லாம் மாறவேண்டாமா என்று கேட்கிறார். அவரது தாயாக அனுமோல் அதை வழிமொழிகிறார். கட்டுப்பாட்டை மீறவிடக்கூடாது என்று கெடுபிடி போடும் ஊர்த் தலைவராக சிங்கம் புலி பழமைவாதப் பிரதிநிதி. சொற்கள் இல்லாமலே உணர்ச்சிகளைப் பார்வையாளர்களுக்குப் பகிர்கிறார் பிரகதீஸ்வரன். மதன், லிங்கா, டிஎஸ்ஆர் தர்மராஜ், லவ்லின் சந்திரசேகர், காயத்ரி தாரா, ஜென்சன், ராஜாமணி மெலோடி,  ரேஷ்மி, கௌதம், முத்துப் பாண்டி என எல்லா நடிகர்களின் பங்களிப்பும் நிறைவு. கதையோடு இணைந்து செல்ல வைக்கிறது ரேவாவின் இசை. ஊரை அப்படியே காட்சிப்படுத்துகிறது இராம்ஜியின் ஒளிப்பதிவு. கதையோட்டத்தின் விறு விறுப்பை உறுதிப்படுத்துகிறது கணேஷின் தொகுப்பு. கலாச்சாரக் கயிறுகளால் பெண் கட்டிப்போடப் படுவதை மட்டும் சொல்லிக்கொண்டிராமல், அந்தக் கயிறை அறுப்பதற்கான வழியாகக் கல்வியை வலியுறுத்துவது சிறப்பு.

ஆண்களின் கவுரவத்தை எதற்காகப் பெண்களின் கால்களுக்கிடையில் தேட வேண்டும், கோயிலை இடித்துவிட்டால் பெண்களை எப்படிக் கட்டுப்படுத்துவது போன்ற உரையாடல்கள் அந்தச் சிறப்புக்கு வலுச் சேர்க்கின்றன. 1990களில் கதை நிகழ்கிறது. அப்போது கோமாவில் விழுகிற உதவித் தலைமையாசிரியர், இந்த நூற்றாண் டில் விழித்தெழுந்து, ஊரில் மேற்படிப்புக்காகச் செல்கிற மாணவர்களைப் பார்த்து, “இங்கே ஏது ஹைஸ்கூல், இங்கே ஏது கல்லூரி, பைத்தியக்காரர் களா…” என்று சொல்வார். நிகழ்ந்துவரும் மாற்றங் களைக் காண மறுத்துக் கண்மூடிக் கிடப்பவர்களின் உருவகமே அந்தக் கதாபாத்திரம். மறுக்க முடியாத கதைக்கருவோடும், உயிரோட்ட முள்ள நிகழ்வுகளோடும் வலைத்தொடர்களின் மீது ஒரு புதிய மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் முத்துக்குமார்.  தமிழ்ச்செல்விகள் எங்கும் புறப்படட்டும். சினிமாவின் தீட்டு தொலையும். அயலிகள் எங்கும் புறப்படட்டும். சமூகத்தின் தீட்டு தொலையும்.

;