tamilnadu

img

எளிமையிலும் அசத்திய மாணவர்கள்

பொதுவாக மாநில அளவிலான தடகள போட்டிகள் என்றால் உயர்தர ஜெர்சிகள், ட்ராக்குகள், காலணிகள் ஆகியவை கண்டிப்பாக அணிய வேண்டும் என விதிமுறை உண்டு. ஆனால் வாலிபர் சங்க விளையாட்டுப் போட்டியை நடத்திய நிர்வாகிகள் விதிகளை தளர்த்தினர். இதனால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மாணவ செல்வங்களும் தங்களது திறமைகளை நிரூபித்து பரிசுகளை வென்றனர். குறிப்பாக ரப்பர் பொருத்தப்பட்ட ஓடுதளத்தில் காலணி வெற்றி ஒன்று இல்லாமல் ஓட முடியாது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வெற்றி என்ற இலக்குடன் ஓடி பதக்கங்களை வென்றனர்.

கட்டமைப்பு வசதிகளில் சொதப்பும் ரேஸ்கோர்ஸ் 
மதுரைக்கு மட்டுமல்லாமல் தென் தமிழ்நாட்டின் முக்கிய விளையாட்டு அரங்காக இருப்பது மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் தான். உள்ளரங்கம், வெளியரங்கம் என அனைத்து வசதிகள் இருந்தாலும் உள்ளே உள்ள விளையாட்டு உபகரணங்கள் எலும்புக்கூடு போன்று உள்ளது. ஓட்டப்பந்தயத்திற்கான ஓடுதளம் சேதமாகியுள்ளது. நீளம் தாண்டுதல் பகுதி ஒழுங்காக இல்லை. தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் குண்டுகுழியுமான சாலைகள் போன்று உள்ளது. இதனால் மாணவர்கள் கணிப்பில் கோட்டை விடுகின்றனர். உயரம் தாண்டுதலில் தாவி குதிக்கும் பஞ்சு விரிப்பான் கிழிந்த நிலையில் உள்ளது. மாணவர்களுக்கு பரிசு வழங்க நிழற்குடையும் கிடையாது. வாலிபர் சங்க போட்டிக்கு வருகை தந்த முக்கிய விருந்தினர் கூட சுட்டெரிக்கும் வெயிலில் தான் பரிசுகளை வழங்கிச் சென்றனர். மாணவர்களுக்கு வழங்க குடிநீர் வசதி கூட அவ்வளவாக  கிடையாது. ஆனால் ஒரு தொடரை நடத்த இரண்டு நாட்களுக்கு ரூ.27,000 மட்டும் சரியாக வசூலித்து வருகின்றனர்.

;