குழித்துறை, மே 29- மும்பையிலிருந்து தமிழக கேரள எல்லையான களியக்காவிளை வந்து உணவின்றி அவதிப்பட்ட குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவிக்கரம் நீட்டினர். மும்பையிலிருந்து ரயிலில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்கள் வியாழ னன்று திருவனந்தபுரம் வந்தனர். அவர்கள் கேரள அரசுப் பேருந்தில் மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அழைத்து வரப்பட்டனர். அங்குள்ள சோதனை சாவடியில் குமரி மாவட்ட நிர்வா கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் குமரி மாவட்ட நிர்வாகம் மும்பையில் இருந்து வந்த 40 பேரையும் எந்த வசதிகளையும் செய்து கொடுக்காமல் சாலையோரங்களில் காத்திருக்க வைத்தது. கழிப்பிட வசதிகள் ,உணவு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாததால். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் பெரிதும் அவதியுற்றனர். இதனை யறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மார்த்தாண்டம் வட்டார செயலாளர் அனந்தசேகர் உள்ளிட்டோர் நேரில் சென்று குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட வற்றை வழங்கினர். மாவட்ட நிர்வா கம், துணை தாசில்தார் ஆகியோருடன் தொடர்ந்து பேசிய பின்னரும் அவர்கள் நெடு நேரம் காக்க வைக்கப்பட்ட பின்னர் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.