tamilnadu

img

அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு... சீறிப் பாய்ந்த காளைகள் 83 பேர் காயம்... கழுத்து இறுகியதால் காளை பலி ; “வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் முழக்கம்”

அவனியாபுரம்/பாலமேடு:
தைத்திருநாளையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வியாழனன்று   நடைபெற்ற போட்டியில் ஐந்தாவது சுற்றில் வீரர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென இரண்டு மாடுபிடி வீரர்கள் வேளாண் சட்டத்திற்கு எதிராக கருப்புக்கொடி காட்டி முழக்கம் எழுப்பினர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காவல்துறை இரண்டு வீரர்களையும் களத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.ஜல்லிக்கட்டில் 523 காளைகள், 420 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு எட்டு சுற்றுகளாக நடைபெற்றது. மதுரை முத்துப் பட்டி திருநாவுக்கரசு, ஜெய்ஹிந்த்புரம் விஜய் ஆகியோர் தலா 26 காளைகளைப் பிடித்து முதலிடம் பெற்றனர். இவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் பரிசளிக்கப்பட்டது. பரிசுத் தொகை ரூ.1 லட்சம் பகிர்ந்து வழங்கப்பட்டது.  சிறந்த காளையாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை நிறுவனர் ஜி.ஆர். கார்த்திக்கின் வேலு என்ற காளை தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு இருசக்கர வாகனம் மற்றும் 1லட்சம் பரிசுதொகை வழங்கப்பட்டது

பலியான காளை
மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த காளையின் கழுத்தில் கயிறு இறுகியதால் பரிதாபமாக உயிரிழந்தது. 58 மாடுபிடிவீரர்கள், மூன்று காளைகள் காயம்அடைந்தனர். காளை அவிழ்ப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாகநடைபெற்ற  சம்பவத்தில்  மதுரை கரடிக்கல் பெருமாள்பட்டியை சேர்ந்த அருண்குமார்(27), தேவேந்திரன் (25). ஆகிய இருவரும் கத்தியால்குத்தப்பட்டனர். இருவரும் மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பாலமேடு
மதுரை மாவட்டம், பாலமேட்டில் வெள்ளிக்கிழமை காலை எட்டு மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.  போட்டியையொட்டி மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர்.  முதலில் பாலமேடு கிராம மகாலிங்க சாமி கோவில் காளைகள் உள்ளிட்ட கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, ஜல்லிக்கட்டு துவக்கி வைக்கப்பட்டது. போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். மதுரை ஆட்சியர் த.அன்பழகன், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.  ஏழாவது சுற்று முடிவில்564 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 199 காளைகள் பிடிப்பட்டன. நான்கு மணியோடு நிறைவு பெற வேண்டிய ஜல்லிக்கட்டு  மாலை ஐந்து மணி வரை நீட்டிக்கப்பட்டது. போட்டியின் நிறைவில் 675 காளைகள் பங்கேற்றதாகவும் 600 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டதாகவும் தெரி
விக்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் மொத்தம் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.  போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரைகருப்பாயூரணியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கார்த்தி முதல் பரிசான காரை பெற்றார். 17 மாடுகளை அடக்கிய பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் இரண்டாம் பரிசு பெற்றார். அவருக்கு ஒரு பவுன் தங்கக்காசு பரிசாக அறிவிக்கப்பட்டது. மூன்றாவது பரிசைஅலங்காநல்லூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் பெற்றார். அவருக்கு கேடயம் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையாக பாலமேடு ஜெயராமன் காளை தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு கன்றுடன் கூடிய காங்கேயம் பசு பரிசளிக்கப்பட்டது.இரண்டாவது பரிசு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது காளைக்கு தங்க நாணயமும், மதுரை சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் காளைக்கு மூன்றாவது பரிசாக கேடயமும் வழங்கப்பட்டது.போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக களம் கண்ட வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கு குக்கர், எல்.இ.டி தொலைக்காட்சி, பிரிட்ஜ், தங்ககாசு, மோட்டார், கிரைண்டர், இருசக்கர வாகனம், கட்டில் மெத்தை, சைக்கிள் உட்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.மின்மோட்டாரை பரிசாக பெற்ற மாடுபிடி வீரரிடம் அதை விழாக்குழுவினர் தூக்கிப் போட்டனர். மோட்டார் தவறி விழுந்ததில் மாடு உரிமையாளர் ஒருவரின் மண்டை உடைந்தது.

மாடுபிடி வீரர்கள் தேர்வில் முறைகேடு
இரண்டாவது பரிசு பெற்ற மாடுபிடி வீரர்பிரபாகரன் “தேர்வில் முறைகேடு நடந்துள்ள தாகக் கூறி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விழாக்குழுவினருடன் விவாதம் செய்தார். பின்னர் பரிசைவாங்க மறுத்துவிட்டார். அவரது பரிசு விழாக்குழு வினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அரசு வேலை
பாலமேடு ஜல்லிக்கட்டைத் துவக்கிவைத்த  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது பரிசீலனையில் உள்ளதாகக் தெரிவித்தார்.அலங்காநல்லூரில் இன்று முதல்வர், துணை முதல்வர் பங்கேற்புஉலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சனிக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். முன்னதாக மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கும் தமிழக முதல்வர் கொரோனா தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைக்கிறார்.

படங்கள் : ஜெ. பொன்மாறன்
 

;