tamilnadu

img

கொலம்பஸ்.. கொலம்பஸ்.. விட்டாச்சு லீவு - கணேஷ்

டேய்... போடா... என்ற குரலைக் கேட்டு திரும்பியவர், என்னம்மா ஆச்சு... என்றார்.
அவனப் பாருங்க, அங்கிள்.. லீவு விட்டாச்சுனு நக்கலா சொல்லிட்டுப் போறான்..
நீங்கள்லாம் பாட்டு வேற பாடுனீங்களே..
ஆமா... அந்த கொலம்பஸ், கொலம்பஸ்.. விட்டாச்சு லீவு. தான.. ஆனா, கொலம்பசுக்கும், லீவுக்கும் என்ன சம்பந்தம் அங்கிள்..
சம்பந்தம் இருந்தாதான் நாம பேசுவோமா என்ன..? ஆடிக்கும் தள்ளுபடிக்கும் என்ன வித்தியாசம்..?
ஆடி மாசத்துல நிறைய வாங்குறதுக்காக தள்ளுபடி விற்பனை பண்றாங்க..
அதுக்காக இல்ல... முன்னாடிலாம் ஆடி மாசம் எதுவும் வாங்கக்கூடாதுன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு... விற்பனையே இருக்காது.. அத உடைக்குறதுக்காகதான் தள்ளுபடி வந்துச்சு... இப்பலாம் ஆடில வாங்குறதுக்கு சீட்டு போட்டுட்டு இருக்காங்க..
தள்ளுபடிங்குறது உண்மையா அங்கிள்..
பெரும்பாலும் இல்ல... 2 ஆயிரம் ரூபா பொருளுக்கு 3,500னு விலை வெச்சு, 1,500 தள்ளுபடி பண்றாங்க..
அங்கிள், கொலம்பசுக்கு வாங்க.
இங்கயும் அதுதான்..  நிச்சயமா கொலம்பஸ் லீவக் கண்டுபிடிக்கல.. ஆனா, மேற்கு இந்தியத்தீவுகளக் கண்டுபிடிச்சாரு..
அவர்தான அமெரிக்காவக் கண்டுபிடிச்சாரு..
இல்ல.. முதல்ல தான் கண்டுபிடிச்சது இந்தியானு நெனச்சுக்கிட்டாரு... அங்க இருக்குற மக்களப் பாத்து இந்தியர்களா இருக்கும்னு சொல்லவும் செஞ்சாரு... ஆனா, இப்ப நாம மேற்கு இந்தியத் தீவுகள்னு சொல்ற இடத்துக்குதான் அவர் போனாரு.. அமெரிக்கன் வெஸ்புகிதான் அமெரிக்காவக் கண்டுபுடிச்சாரு..
மக்கள்லாம் பயந்து போனாங்களா..
மிரண்டாங்க... விரட்டலாம்னு நெனச்சு வந்தாங்க.. ஆனா, கொலம்பஸ் அவங்களத் தன் வசம் கொண்டு வந்தாரு.. நண்பேன்டானு கட்டிப் பிடிக்குற அளவுக்கு வந்துச்சு. அவரு திரும்பிப் போனாரு..அவரோட நண்பர்கள் வந்தாங்க.. அவங்களுக்கு வரவேற்பு கிடைக்கவே செஞ்சுச்சு.. ஆனா, நண்பர்களின் சேட்டை அதிகமாகவே மக்கள் விரட்டியடிச்சாங்க... கொலம்பஸ் கிட்ட போய் சொன்னாங்க..‘
அவரு என்ன பண்ணுவாரு..?
கிளம்பி வந்தாரு.. முதல்ல யாரோ வர்றாங்கன்னு விரட்டியடிக்க வந்த மக்கள், கொலம்பஸ் வந்ததப் பாத்துட்டு அமைதியா இருந்தாங்க.. முகத்தை இறுக்கமா வெச்சுகிட்டு வந்த கொலம்பஸ், என் நண்பர்கள நீங்க விரட்டியடிச்சதுனா என்னாச்சு தெரியுமா.. கடவுள் உங்க மேல கோபமா இருக்காரு.. இன்னும் 15 நிமிஷத்துல உங்ககிட்டருந்து சூரியனப் பிடுங்கிட்டு போகப் போறாரு..
அதெப்புடி சூரியனப் பிடுங்கிட்டுப் போக முடியும்?
கொலம்பஸ் நிறையப் புத்தகம் படிப்பாரு.. அன்னிக்கு கிரகணம்.. அதோட நேரமும் புத்தகத்துல இருந்துது.. அத வெச்சுதான் அவரு அப்படிச் சொன்னாரு.. நேரம் ஆக, ஆக மக்கள் மனசுல பீதி உதிச்சுது... திடீர்னு சூரியனக் காணோம்... ஒரே புலம்பல் சத்தம்.. சிலர் முன்னாடி வந்து, எங்களக் காப்பாத்துங்க.. நீங்க சொல்ற மாதிரி நாங்க கேக்குறோம்னு கதறுனாங்க.
கொலம்பஸ் என்ன சொன்னாரு அங்கிள்..
சரி.. நான் கடவுள்கிட்ட பேசிப் பாக்குறேன். அப்புடினு சொல்லிட்டு கப்பலுக்குப் போயிடுவாரு... 35 நிமிஷம் கழிச்சு கிரகணம் விலகிடும்னு அவருக்குத் தெரியும்.. கொஞ்ச நேரம் கழிச்சுத் திரும்பி வந்து நான் கடவுள்கிட்ட பேசிட்டேன்.. நண்பர்களத் தொந்தரவு பண்ணாம இருந்தா சூரியனத் திரும்பத் தர்றேன்னு சொல்லிட்டாரு..
மக்கள் ஏத்துக்கிட்டாங்களா..
வேற வழி.. கொஞ்ச நேரத்துல சூரியன் வந்துச்சு.. மக்கள் எல்லாரும் மண்டியிட்டு கொலம்பச வணங்குனாங்க.. அன்னிக்கு அடிமையானாங்க.. இன்னிக்கு அவங்க இனமே காணாமப் போயிடுச்சு..
கப்பலுக்குப் போய் என்ன பண்ணாரு அங்கிள்.
ஒரு கண்ணாடி முன்னால உக்காந்துப் பாத்துக்கிட்டே இருந்தாராம்..
அப்போ கொலம்பஸ் நல்லவரு இல்லையா..
இவங்க எல்லாரும் மத்த நாடுகள அடிமையாக்குறதுக்கு கிளம்புனவங்கதான்.. 
வாஸ்கோட காமாயையும் சேத்துதான் சொல்றீங்களா..
1498ல வந்தாரு... பத்து வருஷத்துக்குள்ள அரபிக்கடல் முழுக்க போர்ச்சுகீசியர் வசம் வந்துருச்சே..
இவ்வளவு மோசமானவங்கள வெச்சு ஜாலியான பாட்டு எழுத எப்புடி மனசு வந்துச்சு.. அங்கிள், நல்ல வேளை... பாட்டுனு சொன்னவுடன தமிழ் இலக்கியம் படிக்கனும்னு ஞாபகம் வந்துருச்சு... வர்றேன்..

;