tamilnadu

img

‘நீங்கள் ஒன்று திரண்டால் எந்தச் செங்கோலும் பணியும்’ - காலத்தை வென்றவர்கள்

மலக்குழியில் மூழ்கி மரணிக்கும் மனிதனுக்காக மனம் பதை பதைத்து அவர்களைத் திரட்டி போராடிய மார்க்சிய மாமனிதர் தோழர் வி.பி.சிந்தன்!

ஆ... அந்தக் காட்சிதான் எத்தனைக்  கொடியது? அது தொழிலாளி வர்க்கத்தின் சகிப்புத்தன்மைக்கு சான்று. அதுவொன்றும் காணக் கிடைக்காத காட்சி யல்ல. நம்மில் பலர் கண்மூடி... முகந்திருப்பி.. அறுவறுத்துக் காண மறுப்பது; நான் கண்டு துடிப்பது. நாகரீகம் கொடிகட்டிப் பறக்கும் நகரத்து வீதிகளில், நாள்தோறும் அந்தத் தொழிலாளி க்கு ‘நரகல் அபிஷேகம்’ நடக்கிறது. நம் ஒப்புத லுடன், அவனின் ஒப்புதலுடன் சமூகத்தின் சகல அழுக்குகளும் சலசலத்து ஓடுகின்ற பாதாளச் சாக்கடையில்... வீசும் நச்சுக்காற்றையும் பொரு ட்படுத்தாது, அதனுள் இறங்கி, முகத்தில்... உதட்டில்... கண்ணில் என... கருத்த உடல் முழு வதும் மஞ்சள் திட்டுத் திட்டாய்... ஒரு மனித னுக்காக இன்னொரு மனிதன் மலக்குழியில் முக்குளிப்பது என்பது எத்தனை சோகமானது? இந்த லட்சணத்தில் இந்தியாவை 21ஆம் நூற்றாண்டை நோக்கி அழைத்துப் போக... எத்தனைப் பிரதமர்கள்? அமைச்சர்கள்...? மலக்குழியின் அடைப்பை நீக்கிட, சாக்கடையில் இறங்கும் தொழிலாளர்களை அதிலுள்ள நச்சுக்காற்றுத் தாக்கி, அடிக்கடி பல தொழிலாளர்கள் சாவதென்பது சாதாரண மானது. இது என் மனசை அறுத்தது. இவர்களுக் காகப் போராட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்  எழுந்தது. துப்புரவுத் தொழிலாளர் களின் உயிருக்கு வேட்டு வைக்கும் இந்த அவலம் அழிய, சாக்கடைகளைச் சுத்தம் செய்ய சரியான கருவிகள் வழங்கக் கோரி யும்... அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கக் கோரியும் ஒரு போராட்டம் நடத்த எண்ணினேன்.

காவல்துறையின் கலகமும் கொலையும்

போராட்டம் குறித்து, நகரசுத்தித் தொழி லாளர்களைச் சந்தித்துப் பேசினேன். முதலில் அவர்கள் போராட்டம் என்றவுடன், ‘’எங்கே இருக்கிற வேலையும் போய் விடுமோ “ என்று அஞ்சினார்கள். நான் ராப்பகலாய் அந்தத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியிலேயே தங்கி, அவர்களின் நிலையை அவர்களுக்கு விளக்கி னேன். “நீங்கள் ஒன்று திரண்டால், எந்தச் செங்கோலும் பணியும்” என்று அவர்களது வலுவை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். கடைசியில், மறியலில் கலந்து கொள்ள சகல தொழிலாளர்களும் ஒப்புக்கொண்டார் கள். போராட்டத்தின் எண்ணத்தையும், அதன் எழுச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊர்வலத்திற்குத் தலைமை ஏற்ற நான், அந்தத் தொழிலாளர்களிடையே, சிறிது நேரம் பேசினேன். இந்தப் போராட்டத்தை உடைக்கவும், ஒடுக்கவும் முடிவு செய்துகொண்ட காவல்துறையினர் - அமைதியாகச் சென்று கொண்டிருந்த ஊர்வலத்தில் புகுந்து கலகம் விளைவித்து, தடியடி நடத்தி, ஒரு வயதான பெண்மணியைக் கொன்று விட்டார்கள். நாங்கள், காவல்துறையின் ரௌடித்தனத் தைக் கண்டித்துப் பொது வேலை நிறுத்தம் செய்தோம்.

உண்மையின் புதைகுழி...

மக்களை வன்முறைக்குத் தூண்டுவதாக என்மீது குற்றம்சாட்டி வழக்குப் போட்டனர். வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை சேதப்படு த்தாத சிறுவன் தான் யார்? பொய் வழக்குப் போடாத காவல்துறைதான் எங்குள்ளது? இந்த வழக்கின் போதுதான், நீதிமன்றம் என்பது, ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை ஆயுதம் ; உண்மையின் புதைகுழி என்ற மார்க்ஸின் கருத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தேன். இவ்வழக்கில், எனக்கு ஆதரவாக ஒரு நகர சுத்தித் தொழிலாளி “காவல்துறைக்கு எதிராக நான் எவ்விதத்திலும் பேசவில்லை. வன்முறையைத் தூண்டவில்லை” என்று சாட்சியம் அளித்தார். காவல்துறை தரப்பு சாட்சியாக, பகதூர் பட்டம் பெற்ற பணக்காரர் ஒருவர், நான் வன்முறையைத் தூண்டினேன்; அமைதியை அழித்தேன் என்று கூசாமல் பொய்முட்களைத் தூவினார்.

அம்பலம் ஏறாத ஏழை சொல்...

“வி.பி.சிந்தன் வன்முறையைத் தூண்டவில்லை என்று சொல்லுகின்ற சாட்சி யார்? அவர் தகுதி என்ன? ஒரு சாதாரண தெருக்கூட்டுகின்ற துப்புரவுத் தொழிலாளி; காக்கிச்சட்டை - அதுவும் அரைக்கால் சட்டை போட்டவன். படிப்பறிவு அற்றவன். சமூக செல்வாக்கு இல்லாத அனாதை. வி.பி.சிந்த னின் பேச்சு வன்முறையைத் தூண்டியதா - இல்லையா என்பதைப் பகுத்துணரக்கூடிய அறிவு அவனுக்கு இல்லை. ஆனால், சிந்தனின் சொற்பொழிவு மக்களி டையே, தொழிலாளிகளிடையே வன்முறை யைத் தூண்டிவிடும் விதமாக இருந்தது என்று, காவல்துறை தரப்பில் சொல்லும் சான்றளித்தவர், சமூக செல்வாக்குள்ளவர். விருதுகள் பல பெற்ற பட்டதாரி. வருமான வரி  கட்டுபவர். எனவே, படித்த பணக்காரரின் சான்ற ளிப்பையே நீதிமன்றம் நம்ப வேண்டும்; ஏற்க வேண்டும் என்று காவல்துறை தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். நீதிபதியும், காவல்துறை தரப்பு வழக்கறி ஞர் கட்டளைக்குச் செவிசாய்த்து, ஓராண்டு கால கடுங்காவல் தண்டனையை எனக்கு வழங்கினார். அன்றே சென்னை சிறையில் அடைக்கப்பட்டேன். அது 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதியின் பிற்பகல். சூரியன் மெல்ல மேற்கே சரிந்து கொண்டிருந்தான். வானம் பொன்மயமாகத் தகித்துக் கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் என் அறைக்கு வந்து, சிறை அதிகாரி, ‘உங்களுக்கு இன்று விடு தலை’ என்ற உத்தரவை என்னிடம் நீட்டினார். எனக்குள் ஒரே சந்தோஷம். கண்ணீர் மாலை மாலையாக கரைபுரண்டு வந்தது. சுதந்திரப் பெருவிழாவில் பங்கேற்கிற பாக்கியம் கிடைத்துவிட்டதே என்று துள்ளிக் குதித்தேன்.

கவிஞர் இளையபாரதிக்கு அளித்த பேட்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் வி.பி.சிந்தன்.
தொகுப்பு : யு.கே.சிவஞானம்


 

;