tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிறப்பு, இறப்பு பதிவுக்கு புதிய விதிகள் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு தொடர்பான புதிய விதிகளான “தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள், 2025”ஐ வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள் 2000ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிகளை மாற்றியமைக்கின்றன. புதிய விதிகளின்படி பிறப்பு மற்றும் இறப்புத் தகவல்களை அளிக்கும்போது அனைத்து விவரங்களையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும். எவ்விதமான சுருக்கங்களை யும் பயன்படுத்தக்கூடாது. ஒரு பிறப்பு அல்லது இறப்பு  நிகழ்ந்து 30 நாட்களுக்குப் பிறகு அல்லது ஒரு வருடத்திற்குள் பதிவு செய்ய விரும்பினால், இப்போது வட்டாட்சியர் அனுமதி வழங்கலாம். முன்பு இதற்குக் கிராம பஞ்சாயத்துத் தலைவரின் அனுமதி தேவைப்பட்டது. பதிவுகளில் குறிப்பிடப்படும் தேதிகள் dd-mm-yyyy என்ற வடிவத்தில் இருக்க வேண்டும். இனி பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை மின்னணு வடிவத்திலும் பெற முடியும். 

தமிழகத்தில் 21 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது!

சென்னை, ஆக. 14 - சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தகைசால் விருதுக்கு ஏடிஜிபி பால நாகதேவி, ஐஜி ஜி.கார்த்திகேயன், ஐஜி எஸ்.லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாராட்டத்தக்கப் பணிக்கான விருதுக்கு எஸ்.பி. ஏ.ஜெயலட்சுமி, துணை ஆணையர் ஆர்.சக்திவேல், எஸ்.பி. எஸ்.விமலா, டி.எஸ்.பி. பி.துரைபாண்டியன், ஏ.எஸ்.பி. பி.கோபாலசந்திரன், ஏ.எஸ்.பி. கே.சுதாகர் தேவசகாயம், டி.எஸ்.பி. சி.சந்திரசேகர், உதவி ஆணையர் எஸ்.கிறிஸ்டின் ஜெயசில், உதவி ஆணையர் எஸ். முருகராஜ், டி.எஸ்.பி. எம்.வேல்முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆய்வாளர்கள் பி.பொன்ராஜ், ஜே. அதிசயராஜ், பி.ரஜினிகாந்த், எம்.ரஜினி காந்த், ஆர்.நந்தகுமார், பி.ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் எஸ்.ஸ்ரீவித்யா, சி.அனந்தன், பி.கண்ணுசாமி, எஸ்.பார்த்தி பன், என்.கணேசன் ஆகியோரும் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர். தமிழக தீயணைப்புத் துறையைச் சேர்ந்த இருவரும் பாராட்டத் தக்கப் பணிக்கான விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தில்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர நாள் நிகழ்ச்சியின்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.