மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் கூடுதல் இடங்கள்
மதுரை, ஆக. 31- மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டி லேயே கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஏராள மானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவ மனையின் அருகிலேயே அரசு மருத்துவக் கல்லூ ரியும் அரசு செவிலியர் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 150-இல் இருந்து 250 ஆக உயர்த்தப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனைக்கு அதிக அள வில் நோயாளிகள் வந்து செல்வதால், நோயாளி களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பி.எஸ்சி. நர்சிங் மற்றும் எம்.எஸ்சி. நர்சிங் இடங்களை அதிகப் படுத்த வேண்டும் என 2022இல் அப்போதைய டீன் ரத்தினவேல், அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் ராஜாமணி உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டிலேயே கூடுத லாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்து 2022-23இல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த வருடத்தில் தமிழ்நாடு செவிலியர் குழுமம் மாண வர் சேர்க்கைக்கு உரிய அனுமதி வழங்க வில்லை. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு செவிலி யர் சங்கத்தின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத் தில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பிற்கு கூடுதல் இடங்கள் வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தற்போதைய டீன் அருள் சுந்தரேஷ்குமார் பி.எஸ்சி. நர்சிங் படிப்பிற்கு கூடுதல் இடங்கள் பெறுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு செவிலி யர் குழுமம், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சிறப்புக் குழு சார்பில் மதுரை செவிலியர் கல்லூரி யில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. கூடுதல் இருக்கைகள், கட்டட வசதிகள், பேராசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, 2025-26 ஆம் கல்வியாண்டில் இருந்து கூடுதலாக 50 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் நடக்கும் கலந்தாய்வில் மாணவர்கள் மதுரை யைத் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகள் கூறுகையில், “தமிழகத்தில் சென்னை, செங்கல் பட்டு, சேலம், தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் அரசு செவிலியர் கல்லூரிகள் செயல்பட்டு வரு கின்றன. இந்தக் கல்லூரிகளில் 50 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள் மட்டுமே உள்ளன. தற்போது மதுரைக்கு 50 இடங்கள் ஏற்கனவே உள்ள நிலையில், கூடுதலாக 50 இடங்கள் வழங்கப் பட்டுள்ளன. இது, தென் மாவட்டங்களில் செவிலியர் படிப்பைப் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதன் மூலம் தனியார் கல்லூரிகளைத் தேடிச் சென்று பல லட்சம் ரூபாய் செலவு செய்து பி.எஸ்சி. நர்சிங் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது. கூடுதல் இடங்களை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மதுரையில் நர்சிங் கல்லூரி தொடங்கி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. பல வருட போராட்டத்திற்குப் பின்னர் கூடுதலாக 50 இடங்கள் கிடைத்துள்ளன. இதேபோல் செவிலி யர்களுக்கான எம்.எஸ்சி. படிப்புக்கு 25 இடங்கள் மட்டுமே உள்ளன. கூடுதல் வகுப்பறைக் கட்ட டங்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தினால் எம்.எஸ்சி. மாணவர்களின் எண்ணிக் கையையும் அதிகரிக்க முடியும். செவிலியர் சம்பந்தமான ஆராய்ச்சிப் படிப்பை அறிமுகப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு அனுமதி கிடைத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்” என்றனர்.
