ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்திடுக! சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை
கும்பகோணம், செப். 25- தஞ்சை மாவட்ட சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்க சிறப்பு தஞ்சை மாவட்டப் பேரவை, கும்பகோணம் சிஐடியு அலுவலகமான வி.பி. சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. பேரவைக்கு, சாலை போக்குவரத்து மாவட்ட தலைவர் ம. கண்ணன் தலைமை வகித்தார் மாநிலக் குழு உறுப்பினர் சுவாமிநாதன், பரத்ராஜ், குடந்தை மாநகரச் செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் சிறப்புரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் ரத்தினவேலு, சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜி. மணிமாறன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆ. செல்வம், குடந்தை மாநகர சுற்றுலா வாகன சங்க தலைவர் குகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலப் பொருளாளர் பார்த்தசாரதி நிறைவுரையாற்றினார். ஒன்றிய அரசாங்கம் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும். ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்திட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில் புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் ஜி. மணிமாறன், மாவட்டச் செயலாளர் கே. சுவாமிநாதன், மாவட்டப் பொருளாளர் டி. பரத்ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
