திருச்சிராப்பள்ளி, ஜன.22 - ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர் எல்.ஜி என அழைக்கப்படும் தோழர் எல்.கோபாலகிருஷ்ணன் (102) உடல் நலக்குறைவால் செவ்வாயன்று காலமானார். திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரில் உள்ள அவரது மகள் விஜயலெட்சுமி இல்லத்தில் புதனன்று அன்னாரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர், மூத்த தோழர் கே.வி.எஸ்.இந்துராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, விவசாயத் தொழிலாளர்கள் சங்க அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், மாநகர் மாவட்டத் தலைவர் தங்கதுரை மற்றும் கட்சித் தலைவர்கள், ஆசிரியர், அரசு ஊழியர்கள், தோழமை சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு அவரது உடல் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரியில் தானமாக வழங்கப்பட்டது.