tamilnadu

img

அழகான குஞ்சுக்கு ஆசைப்பட்ட அருவருப்பான பறவை!

சுபாஷினி அலி
அழகான பறவைக் குஞ்சு பறவைக்கு ஆசைப்பட்ட அருவருப்பான பறவையும்-நேதாஜியின் விடுதலைப் போராட்ட பாரம்பரியத்தை தனதாக்கிக் கொள்ள முற்படும் ஆர்எஸ்எஸ்சும் குழந்தையாக இருந்த போது நான் கேட்ட கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அரு வருப்பான தோற்றமுடைய குறும்புக்காரப் பறவை ஒன்று அழகான குஞ்சொன்றை பொரிப்பதற்கு விரும்பியது. அந்த பறவை அப்போதுதான் சில முட்டை களையிட்டிருந்த ஒரு அழகான பறவையின் கூட்டிற்கு திருட்டுத்தனமாக சென்று அந்தப் பறவையின் முட்டைகளில் ஒன்றை திருடியது. அப்படி திருடிய முட்டையை தன் கூட்டிற்கு எடுத்துப் போய் அடை காத்து ஒரு அழகான பறவையை பொரிக்கும். பிரதமர் மோடி செப்டம்பர் 8 அன்று நேதாஜியின் சிலையை திறந்து வைக்கும் படத்தை பார்த்ததும் இந்தக் கதை தான் எனது நினைவுக்கு வந்தது. அவரது சொந்த சங் பரிவாரங்களில் விடுதலைப் போராட்ட  வீரர்கள் யாரும் இல்லாத கடுமையான பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கான முயற்சி தான் மோடியின் நேதாஜி சிலை திறப்பு நிகழ்ச்சி. சாவர்க்கர் பற்றிய செல்லுபடியாகாத சித்தரிப்பு மக்களிடம் சாவர்க்கரை மிகப்பெரிய விடுதலைப் போராட்ட வீரனாக நிறுவுவதற்கான ஆர்எஸ்எஸ்சின் திட்டம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என்பதைத்தான் நேதாஜி சிலை திறப்பு விழா எடுத்துக்காட்டுகிறது.  

ஆகஸ்ட் 15 இல் செங்கோட்டையில் மோடி, சுபாஷ் சந்திர போசுடன்சாவர்க்கரை ஒப்பிட்டு பேசினார். சாவர்க்கரை மிக உயர்ந்த விடுதலைப் போராட்ட வீரராக சித்தரித்துப் பேசினார். கர்நாடகாவில் அவரது கட்சிக் காரர்களும், சங் பரிவார உறுப்பினர்களும் நேதாஜியுடன் சாவர்க்கர் படத்தையும் போட்டு பேனர்கள் வைத்தார்கள். ஆனால், அந்தமான் தனிமைச் சிறையில் இருந்து தன்னை மன்னித்து விடுதலை செய்தால் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திற்கு விசுவாசத்துடன் உழைப்பேன் என்று வாக்குறுதி அளித்து சாவர்க்கர் இழிவான முறை யில் மன்னிப்புக் கடிதங்கள் எழுதினார் என்ற உண்மையை மூடி மறைக்க முடியவில்லை.  இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சாவர்க்கர் நீண்ட தூரம் சென்றார் என்பதுஎவரும் அறியாத ரகசியம் அல்ல. அவர் தேசிய விடுதலை இயக்கத்தை கண்டனம் செய்தார். இந்து -முஸ்லிம் பிளவை அதிகப்படுத்துவதற்கு தனது சக்தி முழுவதையும் செலவழித்தார். “இந்துத்துவாவின் அடிப்படைகள்” என்ற புத்தகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மற்ற மதத்தினருக்கு இந்தியா புண்ணிய பூமி இல்லை என்ற கோட்பாட்டை பிரச்சாரம் செய்தார். அவர்களுக்கு சமத்துவ மான குடியுரிமை கிடையாது என்ற அரசியல் சித்தாந்தத்தை முன் வைத்தார். இந்த சித்தாந்தத்தைத்தான் சங் பரிவாரக் குடும்பங்கள் சுவீகரித்துக் கொண்டன.

நேதாஜியின் மீதான 
சாவர்க்கரின் குற்றச்சாட்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மீது சாவர்க்கர் கடும் கோபத்தில் இருந்தார். நேதாஜியை “ஜிகாதி இந்து” என்று வசை பாடினார். இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்க நேதாஜி பின்பற்றிய வழிமுறைகளை கடுமையாக கண்டித்தார்.எடுத்துக்காட்டாக, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவக் (ஐஎன்ஏ) கொடியின் நடுவில் மாவீரர் திப்பு சுல்தானின் பாயும் புலி பொறிக்கப்பட்டி ருந்தது. “இட்டிமாட், இட்டிஹாட், குர்பானி” (Eitimad, Ittihad, Qurbani- நம்பிக்கை, ஒற்றுமை, தியாகம்) ஆகிய ஐஎன்ஏ முழக்கங்கள் இடம் பெற்றிருந்தன. நேதாஜி முதன்முதலாக பர்மாவுக்கு வருகை தந்த போது தில்லி பகதூர்ஷா ஜாபரின் அடக்கஸ் தலத்தில் சாடர்(chader) எனும் புனித இடத்தில் போர்த் தப்படும் போர்வையை போர்த்தி மரியாதை செய்தார்.
நேதாஜி சிலை திறப்பு
ஸ்பாட்லைட் மோடி மீது மட்டுமே சங்பரிவாரங்கள் சாவர்க்கரின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருந்து கொண்டே நேதாஜியின் விடுதலைப் போராட்ட பாரம்பரியத்தை தனதாக்கிக் கொள்ள கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. மோடி நேதாஜியின் சிலையை திறந்து வைத்ததன் பின்னணியில் பிரமாண்டமான திட்டங்கள் உள்ளன. அவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. மோடி மீதும் நேதாஜி சிலையின் மீதும் மட்டும் தான் கேமரா வெளிச்சம் குவிக்கப்பட்டது. ஸ்பாட்லைட் எல்லாம் மோடி மற்றும் நேதாஜியின் சிலையின் மீது மட்டும் தான்!கேமராவின் முழுப்பார்வையும் வேறு யாரின் மீதும் படுவதற்கு அனு மதிக்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் கூட மோடியுடன் இல்லை. அவரது அமைச்சரவை சகாக்கள்-ஏன் நேதாஜியின் மகள் அனிதா பிவாஃப் கூட மோடி உடன் மேடையில் அனுமதிக்கப்படவில்லை.

மோடியுடன் நேதாஜியின் சிலை மட்டும்தான்! மக்கள் மனதில் பதியுமாறு அமைதியின் பின்னணியில் பொன்னிற ஒளி வெள்ளத்தை மோடியும் நேதாஜி சிலை மட்டுமே பகிர்ந்து கொண்டனர். தினமும் ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக நேதாஜி சிலையை காண்பதற்கு செல்கின்றனர். நேதாஜியை பற்றிய மர்மங்கள் விலகி விட்டதா? அந்த விடுதலைப் போராட்ட மாவீரருக்குரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளதா என்று அனிதா பிவாஃபிடம் கேட்டதற்கு அவர், தான் அவ்வாறு கருதவில்லை. அது உண்மையும் அல்ல என்றார். சுபாஷ் எப்போதுமே இந்திய மக்களின்மனங்களில் வாழ்கிறார். அவர் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் எந்த அளவுக்கு நேசிக்கப்பட்டார் என்ற உண்மை தன்னை பெரிதும் ஆச்சரியப்படுத்துவதாக கூறினார். சுபாஷின் வீரம், விடுதலைப் போராட்டத்திற்கு அவரது ஆக்ரோஷமான அர்ப்பணிப்பு, இறுதியில் அவரது மரணம், இவை யாவும் நேதாஜியை இந்தி யர்களின் மனதில் மிகப்பெரிய வீரராக நங்கூரம் போட்டு நிலை நிறுத்தியுள்ளது. சமீபத்தில்,நேதாஜியின் சுயசரிதை நூல் மறுபிரசுரம் ஆகியுள்ளது. அந்த புத்தகம் அவரது பிரமாண்டமான தியாகத்தை வெளிப்படுத்துகிறது. முன்பைக் காட்டிலும் மிகவும் அதிகமாக அவரைப் பற்றிய கட்டுரைகள் பல்வேறு மொழிகளிலும் வெளியாகின்றன. நேதாஜியுடன் கூடவே அவருடன் இருந்த வீரர்கள் வீராங்கனைகளை பற்றி அறிந்து கொள்வதிலும் நாட்டு மக்கள்மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஜெய்ஹிந்த் முழக்கம்
ஜெய்ஹிந்த் என்று முதலில் முழங்கியவர் யார்? அந்த முழக்கத்தை உருவாக்கியவர் யார் என்று பலரும் கேட்கின்றனர்.அபித் ஹசன் என்பவர்தான் அந்த முழக்கத்தை உருவாக்கியவர் என்ற உண்மை பலருக்கும் தெரியாது.அவர் ஒரு முஸ்லிம். நேதாஜி கல்கத்தாவில் அவரது வீட்டுக் காவலில் இருந்து ஜெர்மனிக்கு தப்பி சென்றது வீர சாகசம் நிறைந்த செயலாகும். ஜெர்மனியில் அபித் ஹசன் தான் அவரது தனி செயலாளராக இருந்தார். நேதாஜி பின்னர் ஜெர்மனியிலிருந்து கடல் வழியாக நீர் மூழ்கிக் கப்பலில் ஆசியாவுக்கு பயணமானார். அது ஒரு ஆபத்தான பயணம். இந்த நீண்ட  பயணத்தில் நேதாஜியின் நிழல் போல அபித்ஹசன் அவருடனே பயணமானார். ஆசிய நாடுகளில் நேதாஜி செல்லும் இடங்களில் எல்லாம், அவர் தங்கும் வீடுகளிலும் கூடவே ஹசன் தங்க வேண்டும் என்று நேதாஜி வலியுறுத்தினார். நேதாஜியின் வீர சாகசங்கள், பயணங்கள் பற்றி எல்லாம் நமது பிரதமரால் கொஞ்சம் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. அதைவிட அபித்ஹசன் நேதாஜியின் மதச்சார்பின்மையை பற்றி கூறுவதை மோடியால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

நேதாஜியின் கவனமிக்க மதச்சார்பின்மை
இரண்டாம் உலகப் போரில் கைது செய்யப்பட்ட இந்திய போர்க் கைதிகள் ஜெர்மனியில் இருந்தனர். அவர்களைக் கொண்டு நேதாஜி இந்தியப்படை ஒன்றை அமைத்தார். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தார். முகாம்களில், போர் வீரர்களுக்கான வழிபாட்டுத்தலங்கள் தனித்தனியாக இருந்தன. கோவில், மசூதி, குருத்துவாரா, தேவாலயம் என தங்களுக்கான வழிபாட்டு தலங்களில் வீரர்கள் வழிபாடு நடத்தினர். நேதாஜியின் போதனைகளால் போர்வீரர்களிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கியது. சில போர் வீரர்கள் அபித் ஹசனைஅணுகி தாங்கள் தனித்தனி குழுக்களாக வழிபாடு நடத்தாமல் அனைத்துமதத்தினரும் ஒன்றாக வழிபாடு  நடத்தலாம் என்றனர். ஹசன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பின்னர் ராணுவ வீரர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இறைவனை ஒன்றிணைந்து வழிபட்டனர். அனைவரும் ஒன்று சேர்ந்த பொதுவான இறை வழிபாட்டுப் பாடலை உருவாக்கினர். நேதாஜி ராணுவ முகாமிற்கு வந்தபோது அவரின் முன்பு பொது வழிபாட்டு பாடலை ராணுவ வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெருமையுடன் பாடினர். நேதாஜியின் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை. எந்தவிதமான எதிர்வினையையும் காட்டவில்லை. சிறிது நேரம் கழித்து நேதாஜியின் தனி அறைக்கு ஹசன் வரவழைக்கப் பட்டார். நேதாஜி அவரிடம் “என்ன முட்டாள்தனமான காரியத்தை துவக்கி உள்ளீர்கள்!”என்றார். மத நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விவகாரம். இது போன்ற மத ரீதியான அணுகுமுறை மூலம் இந்தியர்களை ஒன்றிணைப்பது தவறானது. இது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.

மத நம்பிக்கை அரசியல் இயக்கங்களில் எவ்வித பங்கும் வகிக்கக் கூடாது. இந்திய தேசியம் மத அடையாளங்களை கடந்தது என்றார். பல்வேறு மத அடையாளங்களை ஒன்றிணைத்து அதன் அடிப்படையில் இந்திய தேசியம் நிறுவப்படக்கூடாது என்பதை வலியுறுத்தினார். மேலும் அபித்ஹசனிடம் மதத்தை பயன்படுத்தி இன்று உங்களை ஒற்றுமைப்படுத்துவதன் மூலம் நீங்கள் யாரோ ஒருவருக்கு நாளை இதே மத உணர்வுகளை பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்த வழி வகுக்குறீர்கள் என்றார். மதச் சார்பின்மை அடிப்படையை புரிந்து ஜெய்ஹிந்த் முழக்கம் உருவாக்கிய அபித் ஹசன் நேதாஜியின் மதச்சார்பின்மை பற்றிய பகுப்பாய்வையும் அதன் சரியான அடிப்படையையும் அபித்ஹசன் உணர்ந்து கொண்டார். இதுவே எவ்வித மத அடையாளங்களும் இன்றி அனைத்து இந்தியர்களையும் அறைகூவல் விடுத்து விளிப்பதற்கான முழக்கத்தை உருவாக்க அபித் ஹசனை யோசிக்க வைத்தது. அப்படிப் பிறந்தது தான் ஜெய்ஹிந்த் என்ற முழக்கம். அந்த முழக்கம் இன்று வரை மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.ஐஎன்ஏ படைவீரர்கள் எவ்வாறு ஜெய்ஹிந்த் என்று முழக்கமிட்டார்களோ அதே போன்று இன்றும் காவல்துறையினர், ராணு வத்தினர் தங்கள் அதிகாரிகளை ஜெய்ஹிந்த் என்றே மரியாதை செய்கின்றனர். சுபாஷின் மதச்சார்பின்மை காந்தியின் மதச்சார்பின்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. காந்தியின் “சர்வ தர்மா சம பவ”(அனைத்து மதங்களின் ஒற்றுமை) எனும் வழியிலான ஒற்றுமையை நேதாஜி கடுமையாக மறுத்தார். இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

குடும்பத்தை கண்டடைந்த குஞ்சு
போலி பெற்றோரை பிரிந்த பறவையும் ஒவ்வாத கொள்கை உடைய ஆர்எஸ்எஸ் பரிவாரங்களில் நெஞ்சில் வாழாத நேதாஜியும் அருவருப்பான தோற்றமுடைய அந்த குறும்புக்காரப் பறவை அழகான பறவையின் கூட்டில் இருந்த முட்டையை திருடித் தான் அடைகாத்து குஞ்சு பொரித்ததல்லவா? அந்தக் கதை எப்படி முடிந்தது தெரியுமா? அந்த அழகிய பறவைக் குஞ்சு முட்டையை விட்டு வெளியே வந்ததும் அந்த மோசடி பெற்றோரை விட்டுவிலகி தனது இறக்கைகளை விரித்து பறந்து தன் உண்மையான குடும்பத்தை தேடிக் கண்டடைந்தது. இதே போன்று தான் எல்லா வகையிலும் முற்றிலும் மாறுபட்ட நேதாஜியின் பாரம்பரியத்தை தனதாக்கிக் கொள்வது ஆர்எஸ்எஸ் பரிவாரங்களுக்கு முற்றிலும் இயலாத காரியமாகும். நாட்டின் விடுதலையை நேசிக்கும் மக்களின் மனங்களில் நேதாஜி வாழ்கிறார் அவர்களின் மனங்களே அவர் வாழும் வீடு. அவரது கொள்கைகளை பின்பற்றாத வர்கள். அவரின் புகழ் வெளிச்ச பிரதிபலிப்பில் குளித்துக் கொள்ள விரும்புபவர்கள். தங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லாத அவரது பாரம்பரியத்தை தனதாக்கிக் கொண்டு தாங்களும் அவரைப்போல புகழ் பெற ஏங்குபவர்களின் மனங்களில் நிச்சயமாக நேதாஜி வாழவில்லை.

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர். 
இவர் ஐஎன்ஏ பெண்கள் பிரிவு தலைவர் கேப்டன் லட்சுமியின் மகளாவார்
பீப்பிள்ஸ் டெமாக்ரசி, செப். 25.2022. 
தமிழில் : ம.கதிரேசன்

;