கேரளா திருச்சூரில் ஐயந்தோளி என்ற இடத்தில் எல்இடி பல்புகளுக்காக ஒரு கிளினிக் செயல்படுகிறது. இதனால் பழுதான இந்த பல்புகளை எலி வலைகளை அடைக்க இனி பயன்படுத்தவேண்டாம். குப்பையாக வீசியெறிய வேண்டாம். இங்கு கோஸ்ட் போர்டு என்ற நிறுவனத்தின் தலைமையிடத்தில் இந்த கிளினிக் செயல்படுகிறது.
நாற்பது ரூபாயுடன் எரியாமல் பழுதான பல்புடன் சென்றால் பத்தாயிரம் மணிநேரம் பிரகாசத்துடன் புத்துயிர் பெற்று எரியும் பழுது நீக்கப்பட்ட அதே பல்புடன் நீங்கள் வீடு திரும்பலாம். தொடங்கிய சில மாதங்களுக்குள் இந்த ஒளி உமிழ் விளக்குகளை பழுது நீக்க இந்நிறுவனம் பலருக்கும் பயிற்சி அளித்துள்ளது. பஞ்சாயத்தின் வருடாந்திர தொழில் வாய்ப்புத் திட்டத்தின் மூலமும் பழுதுநீக்கப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் தோற்றுநர் மற்றும் இயக்குநர் பி.இ.ராஜீவ், தகவல் தொடர்பு அலுவலர் கே.ஜேக்கப் தேவசி, பொறியியலாளர் இ.ஏ.ஸ்ரீநி ஆகியோர் எர்ணாகுளம் சாஸ்திர சாகித்ய பரிஷத் என்ற அமைப்பின் கிராமப்புற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்திற்கு சென்று இதற்கான பயிற்சிகளைப் பெற்றனர். என்றாலும் இந்நிறுவனத்தில் மின் மற்றும் குழாய் பழுது நீக்கும் பணி செய்துவரும் முகமது காசிம் என்பவரே தன்னார்வத்துடன் இதை அவர்களிடம் இருந்து கற்றார்.
இப்போது இங்கு இவரே எல்இடி கிளினிக்கின் டாக்டர். இதே பகுதியைச் சேர்ந்த குன்னங்குளம் என்ற இடத்தில் செயல்படும் கேரள அரசின் மின்வாரியத்தில் இருந்து பழுது நீக்க 200 எல்இடி பல்புகள் வந்தன. எரியாத பல்புகளை சரி செய்யக் கோரி ஒளி மற்றும் ஒலி கடை (light& sound services) உரிமையாளர்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், அலுவலகங்கள், வீடுகள் போன்ற இடங்களில் இருந்து பெருமளவில் இங்கு வந்து குவிகின்றன.
பல்பின் இயக்கத்திற்கு ஆதாரமான மாடுயூல் (module) எனப்படும் கூட்டை அகற்றி அது மீண்டும் எரியுமாறு செய்யப்படுகிறது. ஒன்றிரண்டு பல்புகள் எரிந்துபோயிருந்தால் அந்த பகுதிகள் சால்டிரிங் செய்யப்பட்டு மீண்டும் அதற்கு உயிர் கொடுக்கப்படுகிறது. இதற்கு கட்டணம் இருபது ரூபாய் மட்டுமே.
பழுதடைந்த பல்புகளை அன்றன்றே சரி செய்து கொடுக்க முடிந்தவரை முயற்சிக்கப்படுகிறது. பயன்படுத்திய பிறகு ஒன்றிற்கும் உதவாது என்று நினைத்து சூழலைப் பாழ்படுத்தும்வகையில் இந்த பல்புகளை தூக்கியெறியாமல் மீண்டும் அவற்றை மறு பயன்பாட்டிற்கு கொண்டுவர உதவும் இதுபோன்ற கிளினிக்குகள் ஒவ்வொரு ஊரிலும் தொடங்கப்படவேண்டும்.