tamilnadu

img

துணிச்சல்மிக்க புரட்சிகர நாளேடு - மு.அப்பாவு

தீக்கதிர் நாளேடு வைர விழா கொண்டாடி வரும் இந்த தருணத்தில், எங்கள் திருநெல்வேலி மாவட்டத் தில் இந்நாளேடு புதிய பதிப்பை தொடங்க உள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்தி வாசிப்போர் நிறைந்த நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த நாளேடு அதிக வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். 1962-63-ஆம் ஆண்டு களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யில் தத்துவார்த்தப் போராட்டம் கூர்மை அடைந்திருந்த நிலை யில், தீக்கதிர் பத்திரிகை தொடங்கப் பட்டிருக்கிறது. கோவை மாவட்டத் தில் முக்கிய தொழிற்சங்கத் தலைவராக இருந்த அப்பு என்ற திரு. அற்புதசாமி அவர்கள் தான் தீக்கதிர் ஏட்டைத் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றி இருக் கிறார். கோவை மாவட்டத் தொழி லாளிகளிடம் பணம் வசூல் செய்து தீக்கதிர் முதன் முதலில் வார ஏடாக வெளிவருவதற்கு அவர் உறு துணையாக இருந்துள்ளார். தீக்கதிர் வார ஏட்டின் முதல் இதழ் 1963ஆம் ஆண்டு ஜுன் மாதம் 29ஆம் தேதி வெளியானது. அதன் பின்னர் 1971ஆம் ஆண்டு முதல் தீக்கதிர் ஒரு நாளேடாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

தீண்டாமைக் கொடுமை, தொழிலாளர் விரோத நடவடிக்கை கள் மற்றும் மதவாத, வெறுப்பு ணர்வு செயல்பாடுகளை எல்லாம் துணிவுடன் எதிர்த்து குரல் எழுப்பி வரும் புரட்சிகர நாளேடாக இன்றளவும் தீக்கதிர் வெளியாகி வருகிறது. நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்த பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையேயும் இந்த நாளேடு வெற்றிகரமாக வெளியாகி வந்துள்ளது. ஏராளமான செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக  ஊடகங்களின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ள இந்த காலத்தில், அச்சு ஊடகங்கள் நடத்துவது லாப கரமான தொழில் அல்ல. அதிலும் மக்களை நெறிப்படுத்தும் சமூக அக்கறை கொண்ட ஊடகமாக நடத்துவது என்பது எவ்வளவு சிரமம் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த சூழலில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி என்று  நான்கு பதிப்புகளை கொண்டுள்ள தீக்கதிர் நாளேடு தனது ஐந்தாவது பதிப்பாக திருநெல்வேலி பதிப்பை தொடங்குவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் தோழர்  பிரகாஷ் காரத், செப்டம்பர் 22ஆம் தேதியன்று இந்த  பதிப்பை தொடங்கி வைக்க விருப்பது சிறப்பாகும். உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் இந்த தீக்கதிர் நாளேடு, தொழிலாளர் வர்க்கத்தினருக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை ஆற்றும் வகையில் மேலும் பல பதிப்பு களை தொடங்கி வெற்றிகரமாக வெளியாக வாழ்த்துகிறேன்.