tamilnadu

img

மோடி அமைச்சரவையின் குற்றப் பின்னணி ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மீது ஆ.ராசா கடும் விமர்சனம்

மோடி அமைச்சரவையின் குற்றப் பின்னணி ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மீது ஆ.ராசா கடும் விமர்சனம்

சென்னை, ஆக.23 - ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருநெல்வேலியில் பேசிய பேச்சுக்கு, திமுக எம்.பி. ஆ.ராசா கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் அமைச்சரவையில் 39 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும், இவர்கள் மீதெல்லாம் 130 ஆவது சட்டப் பிரிவு பாயுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். திருக்குறள் மீதான அமித் ஷாவின் பேச்சுக்கு விளக்கம் அளிக்கையில், “திருக்குறளின் வழி நின்று ஆட்சி நடத்தி வருகிறார் மோடி” என அமித் ஷா கூறியதற்கு, ஆ.ராசா ‘திருவள்ளுவர் உயிரோடு இருந்திருந்தால் குறள் பாடியே ஒன்றிய அரசைச் சாடியிருப்பார்’ என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.  “பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை நன்று” என்ற குறளை ஒன்றிய அரசு படிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமித் ஷா மகன் மீது புகார் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு செயலாளர் ஆனார் என்று கேள்வி எழுப்பிய ஆ.ராசா, “மக்கள் வாக்களித்தால் யாரும் முதலமைச்சர் ஆகலாம் என்றும், தமிழ்நாட்டில் யார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதை இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த அமித் ஷா முடிவு செய்ய முடியாது” என்றும் தெரிவித்துள்ளார். 130 ஆவது சட்டத்திருத்தம்  மோடியின் அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மீது வழக்குகள் இருப்பதாகவும், இதில் 19 அமைச்சர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளதாகவும் ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார். பாஜக தனது அரசியல் எதிரிகளை மிரட்டி ஆள முடியாது. மாநில அரசுகளை முடக்குவதற்கு 130-ஆவது அரசியல் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அமித் ஷா 2018இல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஊழல் ஆட்சி என்றும், 2016இல் ஜெயலலிதா ஆட்சியை நாட்டிலேயே ஊழல் மிகுந்தது என்றும் கூறிவிட்டு, அதிமுகவோடு கூட்டணி வைப்பது சாணக்கியத்தனம் என்று விமர்சித்துள்ளார். தேர்தல் பத்திர ஊழல், ரஃபேல் விமான முறைகேடு உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றிய பாஜக அரசு மீது உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.