நடிப்பு
எட்டே மாதங்களில் யமுனை நதியைச் சுத்தம் பண்ணி விட்டதாக ஆளும் பாஜக அரசு சொல்லி வருகிறது. அதன் செய்தித் தொடர்பாளர் அனில் குப்தாவோ, செய்தியாளர்களை அழைத்துச் சென்று குடித்துக் காண்பித்ததாகப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. “செய்தியாளர்களை அவர் எப்போது அழைத்துச் சென்றார். எங்களுக்கு எல்லாம் தெரியாதே” என்று தில்லி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். எதிர்க்கட்சிகளோ, ‘இந்த நடிப்பெல்லாம் யாரை ஏமாற்றுவதற்கு’ என்று கிடுக்கிப்பிடி போடுகின்றன. “நாங்களும் வருகிறோம். முதல்வரும், பாஜகவின் மாநில தலைவரும் ஒரு லிட்டர் தண்ணீரை நதியில் இருந்து எடுத்துக் குடிக்கத் தயாரா?” என்று சவால் விடுத்திருக்கிறார்கள். கங்கையைத் தூய்மை செய்கிறோம் என்று சொல்லி பல ஆயிரம் கோடிகள் கரைந்ததையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
பதட்டம்
வெற்றி பெற்றால் தேஜஸ்வி யாதவ்தான் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று பீகாரில் இந்தியா கூட்டணி அறிவித்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணி பதட்டமடைந்துள்ளது. பல தேர்தல்களில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டு, எதிர்க்கட்சிகளால் இது கூட அறிவிக்க முடியவில்லையே என்று கிண்டல் அடிக்கும் பாஜக, இங்கு மவுனம் சாதிக்கிறது. தேர்தலுக்குப் பிறகு, நிலைமை மாறியிருந்தால் அதற்கேற்ப முடிவெடுக்கலாம் என்பதால்தான் இந்த மவுனம். நாங்கள் கூட்டணி என்பதால் முதல்வர் இவர்தான் என்று அறிவிக்கவில்லை என்பதை வெளிப் படையாகவே சிராக் பஸ்வான் ஒப்புக் கொண்டி ருக்கிறார். தேவைப்பட்டால் முதல்வருக்கான போட்டியில் குதிப்பதற்காக இவரும் தயாராகிக் கொண்டிருக்கிறார். தாங்கள் போட்டியில் 29 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூட்டணிக் கட்சிகளையே இவர் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் நிதிஷ் குமாருக்குக் கூடுதல் பதட்டம்.
ஆதரவு
ஜம்மு காஷ்மீரில் நான்கு இடங் களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஒதுக்கீடு செய்வதில் இந்தியா கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நான்காவது தொகுதியை ஒதுக்கியதால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் போட்டியில் இருந்து விலகியது. இதனால் நான்கு தொகுதிகளிலும் தேசிய மாநாட்டுக் கட்சியே நிற்கிறது. கருத்து வேறுபாடுகளைக் களையும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. பாஜகவின் வெற்றியைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்ற வகையில், நான்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரிப்பது என்று காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக்கட்சி, சிபிஐ(எம்) மற்றும் சுயேச்சைகள் அறிவித்துள்ள னர். பாஜகவின் குதிரைப்பேரம் வெற்றியடை யாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம் என்று கூட்டாக முடிவெடுத்திருக்கிறார்கள்.
திசைதிருப்பல்
திரிபுராவில் 24 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன. பெரும் அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்பாவி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்த வேலைநிறுத்த அழைப்புக்கும், வன்முறைக்கும் ஆளும் கூட்டணியில் உள்ள திப்ரா மோதா கட்சிதான் காரணம் என்று கூறப்படுகிறது. அதோடு, வன்முறை வெறியாட்டத்தைக் காவல்துறையினர் பல இடங்களில் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்கள், தலைமைச் செயலகத்திற்கு வராமல் இருந்துவிட்டனர். வன்முறையாளர்களுடன் ஆளும் பாஜகவும் கைகோர்த்ததையே இது காட்டுகிறது என்று பிரதான எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி யுள்ளது. மக்கள் பிரச்சனைகளான வேலை வாய்ப்பின்மை, மோசமான பொருளாதாரம், சட்டஒழுங்கு நிலவரம் ஆகியவற்றைப் பற்றிய விவாதத்தை மறைக்கவே இத்தகைய நாடகங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
