tamilnadu

அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக 22 வழக்குகள் மாநகரில் 6 வழக்குகள் பதிவு

அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து  பட்டாசு வெடித்ததாக 22 வழக்குகள்  மாநகரில் 6 வழக்குகள் பதிவு

திருநெல்வேலி, அக். 21- தீபாவளி பண்டிகை அக்.20 திங்களன்று கொண்டாடப்பட்டது. இந்நாளில் பட்டாசு வெடிக்க கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுகிறது. இதனால் ஆண்டு தோறும் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப் பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் காலை 6 முதல் 7 மணி வரையிலும் இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு களை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நெல்லைமாநகர பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாடிமணி உத்தரவின்  பேரில் 6 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் தீபாவளி தினத்தன்று மொத்தமாக மாநகரில் 283  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 18 வழக்குகளும், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 100 வழக்குகளும், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததாக 3 வழக்குகளும், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ததாக 38 வழக்குகளும் மற்றும் அடிதடி, வாக்குவாதம் உள்ளிட்ட பிற வழக்காக 124 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக நெல்லை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது, மாவட்டத்தை பொருத்தவரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக மாவட்ட எஸ் பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் 22 வழக்குகள் செய்யப்பட்டுள்ளன.