tamilnadu

img

‘சிவசேனை கட்சியில் இருந்துதான் மகாராஷ்டிரா முதல்வர்’

சஞ்சய் ராவத் எம்.பி., அதிரடி பேச்சு - பாஜக கலக்கம்

மும்பை,நவ.3-  சிவசேனை கட்சிக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.மகாராஷ்டிர மக்களும் சிவசேனை கட்சியில் இருந்துதான் முதல்வரை விரும்புகின்றனர் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர் சஞ்சய் ராவத்தின் அதிரடி பேச்சால் பாஜக தலைவர்கள் கலக்கமடைந்துள்ளனர். நடந்து முடிந்துள்ள மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதில் பாஜக-சிவசேனை கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் முதல்வர் பதவி வேண்டும் என்று சிவசேனை உறுதியாக உள்ளது. சிவசேனை கட்சியின் முடிவால் பாஜக திணறிப்போயுள்ளது.  

முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆகியும் அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் மும்பையில் ஞாயிறன்று சிவசேனை கட்சியின் முக்கிய தலைவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு 170 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது.  இந்த எண்ணிக்கை 175-ஐ எட்டவும் வாய்ப்புள்ளது. அரசு அமைப்பது குறித்து இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இழுபறி நிலையே இன்னும் நீடிக்கிறது. அப்படி பேச்சுவார்த்தை நடைபெற்றால் அது முதல்வர் பதவியைக் குறித்து மட்டுமே இருக்கும். எங்கள் தரப்பில் இருந்து எந்தவித தகவல் தொடர்பு இடைவெளியும் இல்லை.  முதல்வர் பதவி குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஒருவேளை பரஸ்பர முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றால் எங்களது பலத்தைப் பயன்படுத்தி, எங்கள் கட்சியில் இருந்து ஒருவரை முதல்வராக்குவோம். மகாராஷ்டிர மக்களும் சிவசேனை கட்சியில் இருந்துதான் முதல்வரை விரும்புகின்றனர். மேலும், பொய் பேசுபவர்களை வீட்டில் அமர வைக்கவும் மக்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.   மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நவம்பர் 8-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

;