மகாராஷ்டிராவில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருவர் புனேயைச் சேர்ந்தவர் என்றும், 10 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் மூன்று பேர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில சுகாதார நலத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுவது..
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொவைட் -19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குத் தனிமைப்படுத்துதல் மிகவும் முக்கியம். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு இடதுகையில் அழியா மையை இட்டு, இவர்கள் வெளியே செல்லாவண்ணம் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை, புனே மற்றும் நாக்பூரில் உள்ள அனைத்து அத்தியாவசிய சேவைகளுக்கும் தடை விதித்ததாக முதல்வர் உத்தவ் தாக்கரே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், மூன்று சர்வதேச விமான நிலையங்களில், மோசமான பாதிப்புக்குள்ளான 12 நாடுகளிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் முற்றிலுமாக அரசு தடை செய்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்த ஜனதா ஊரடங்கு உத்தரவை மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று டோப் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.