tamilnadu

மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.27-மதுரை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டிருக்கும் மையத்திற்குள் அத்துமீறி நுழைந்த வட்டாட்சியர் மீது உடனே நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்,உதவி தேர்தல்அதிகாரி, காவல்துறை துணை ஆணையர் ஆகியோரை இடமாற்றம் செய்யசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.மதுரை மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு அறைக்குள் ஏப்ரல் 20ஆம் தேதி நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணமும் அவரது ஆட்களும் அங்கு மூன்று மணி நேரம் இருந்து சில ஆவணங்களை எடுத்து வந்து நகல் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரிவேட்பாளர் சு.வெங்கடேசன் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வட்டாட்சியரும் சிலஅதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக புலன் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் இளங்கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியன்று (ஏப்ரல்26) அவசர முறையீடு செய்தார். 

வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் வட்டாட்சியர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு,இந்த மனு மீதான விசாரணை சனிக்கிழமை நடைபெறும் என்று கூறியிருந்தது. அதன்படி சனிக்கிழமை (ஏப்.27) வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாக்குஎண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை ஒப்புக்கொண்டார். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியர், உதவி தேர்தல் அதிகாரி ஆகியோரை மாற்றி விட்டதாகவும் தெரிவித்தார்.உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தான் வட்டாட்சியர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார் என்றும்இதுகுறித்து விசாரித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிராத சாஹூ அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் எனவும் அவர் கூறினார்.ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் வட்டாட்சியர் விஷயத்தில் தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான நடராஜன், பாதுகாப்பு பணியில் இருந்து காவல்துறை உதவி ஆணையர் ஆகியோர் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர்.முறைகேடு செய்யவே இதுபோன்று நடந்திருக்கலாம் என்றும் கூறினர்.மாவட்ட ஆட்சியரின் உதவியாளரை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஏன்விசாரிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் கூடுதல் தலைமை தேர்தல் அளித்த அறிக்கையில் எந்த விவரங்களும் இல்லை என்றும் கூறினர்.நியாயமான நேர்மையான தேர்தல் என்றால் யார் வேண்டுமானாலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சுதந்திரமாக சென்றுவரலாமா என்றும் கேள்விகேட்டனர். வட்டாட்சியர் சென்றபோது காவல்துறை துணை ஆணையர் ஏன் அங்கு பாதுகாப்பு பணியில் இல்லை என்றும் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினர்.இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதுவது மட்டும்தானா தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் பணியா? அவருக்கு இவ்வளவுதான் அதிகாரம் தரப்பட்டுள்ளதா? இந்த அளவுக்கு அதிகாரம் இல்லாத பதவியா அந்தப் பதவிஎன்றும் நீதிபதிகள் கோபமாக கேட்டனர்.

வட்டாட்சிரை தடுத்துநிறுத்தவோ அல்லது சோதனையிடவோ வேண்டாம் என்றுஉயர்மட்டத்தில் இருந்து உத்தரவு வந்ததா? என்றும் காட்டமாக கேட்டனர். அப்போது உரிய பதில் அளிக்கமுடியாமல் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் திணறினார்.வேட்பாளர் புகார் தெரிவித்த பின்னரும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்காதது ஏன் ஏன்று வினவினர். பாதுகாப்பு விஷயத்தில் வேண்டுமென்றே கவனக்குறைவாக நடந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், உதவி தேர்தல் அதிகாரி,காவல்துறை உதவி ஆணையர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோரை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டனர்.மேலும் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் குற்றவியல் வழக்கு தொடரவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.பின்னர் இவ்வழக்கு விசாரணையை இம்மாதம் 30 ஆம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.இந்த வழக்கில் வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யூ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

;