tamilnadu

img

ஆகாத சட்டங்களால் மக்களை ஏன், வதைக்கிறீர்கள்... தயவு செய்து நாட்டை முன்னேற்றுவதற்கான வேலையைப் பாருங்கள்...

புதுதில்லி:
குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேட்டிற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள் மட்டுமன்றி, நாட்டின் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றவரும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லேவும் குடியுரிமைச் சட்டத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக ஹர்ஷா போக்லே, அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:“தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே, மக்களுக்கு இடையிலான வேறுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டத் தகுதி படைத்தது என்று கருத வேண்டாம். என்னுடைய பார்வையில் தாராளமயமாக்கல், வெளிப்படைத்தன்மை, ஒருமித்த செயல்பாடு ஆகியவற்றின் மூலம் வாய்ப்புகளை உருவாக்குவதே நிறைய தேர்தல்களில் வெற்றிகளை குவிக்க வழிவகை செய்யும்.ஒரு சிறந்த அரசாக இருப்பதற்கு இதுவே சரியான நேரம். கல்வி, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கான தடைகளை நீக்கி வெளிப்படைத் தன்மையை உருவாக்கி, தற்போதைய இளைய தலைமுறையின் எண்ணப்படி இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்.நாட்டின் பல்வேறு நகரங்களில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக லட்சக்கணக்கான இந்தியர்கள் வீதிகளில் இறங்கி தங்கள் கோபத்தை போராட்ட வடிவில் காண்பித்து வருகின்றனர்.

இந்தச் சட்டம் சிறுபான்மையினரான முஸ்லிம்களை பிரித்தாளும் சூட்சி செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். நான் நினைக்கிறேன். ‘இளம் இந்தியா’ நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்கிறோமோ, அவ்வாறு இருக்க வேண்டாம் என்று அவர்கள் கூறுகின்றனர். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் என்னுடைய வயதில் அல்லது மூத்தவர்களாக இருக்கக்கூடும்.
நாம் இதுவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். கடந்த 25 ஆண்டுகளாக இந்திய நாட்டின் குடிமக்களாக இருந்து சிறப்பான பணியை ஆற்றி இருக்கிறோம். அதேபோல் அடுத்த தலைமுறைக்கும் வழிவிட வேண்டும்.ஆகையால் போர் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் ஆகியவற்றை பேசி இளைஞர்கள் மீது எந்தவித பாரத்தையும் ஏற்றிவிட வேண்டாம். நாம் இருந்ததை விட அவர்கள் மிகச் சிறப்பாகவே இருப்பார்கள்.அவர்கள் போக்கில் விட்டு விடுங்கள். இந்த மகிழ்ச்சிகரமான, மதச்சார்பற்ற பரந்த உலகத்தில் நமது இளைய தலைமுறை மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக விளங்குவர்.இவ்வாறு ஹர்ஷா போக்லே குறிப்பிட்டுள்ளார்.

;