tamilnadu

img

தொழிற்சங்க இயக்கத்திற்கே அறிவார்ந்த மாற்றை முன்வைக்கிற ஆற்றல் உண்டு... இன்சூரன்ஸ் ஊழியர்கள் மாநாட்டில் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென்

விசாகப்பட்டினம்:
நவீன தாராளமயத்தின் துயரக் கதைகளை மட்டுமின்றி மாற்றுப் பாதையையும் மக்கள் முன்பு வைப்போம் என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க மாநாட்டில் சி.ஐ.டி.யு பொதுச் செயலாளர் தபன்சென் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய போது வேண்டுகோள் விடுத்தார்.விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஒரே நிகழ்ச்சி நிரல்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், சிஐடியுவும் இணைந்து தொழிலாளர் நலன்களுக்காக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறோம்.  சிஐடியுவின் உழைப்பாளர் நலன் சார்ந்த போராட்டங் களுக்கு உங்கள் சங்கம் பக்கபலமாக இருக்கிறது.நிர்வாகங்களாலும், முதலாளிகளாலும் தொழிலாளர்கள். சுரண்டப்படுவதை எதிர்த்து 1970 மே 30 ஆம் தேதி துவங்கப்பட்ட சி.ஐ.டி.யு  50 ஆண்டுகளை கடந்து பொன் விழாவை கொண்டாடவுள்ளது. இன்சூரன்ஸ் ஊழியர்களின் போராட்டப் பாதையும் சிஐடியுவின் போராட்ட பாதையும் ஒன்று என்பதோடு இன்றைய சூழலில் அனைத்து தொழிற்சங்க இயக்கங்களும் மக்கள் நலன் காக்கின்ற, தனது துறை காக்கின்ற,தேச நலன் காக்கின்ற போராட்டங்களில் ஒரே தளத்தில் நின்று குரல் எழுப்ப வேண்டிய தேவை உள்ளது. எழுப்பியும் வருகின்றனர். நமது நிகழ்ச்சி நிரல்கள் எல்லாம் ஒன்றே.

இரவல் கருத்தாக்கம் அல்ல!
இந்திய  பொருளாதாரம் இன்று தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. இன்று அரவிந்த் சுப்பிரமணியம் போன்றவர்களே இதை சொல்கிறார்கள். இவர்களெல்லாம் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள். இவர்கள் இன்றைய பொருளாதார நடவடிக்கைகள் சிலவற்றை விமர்சித்தாலும் நவீனதாராளமயப் பாதையை ஏற்றுக் கொண்ட வர்கள். மாற்றுப் பாதையை முன்வைப்பவர்கள் அல்லர். அரவிந்த் சுப்பிரமணியம் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்த காலத்தில்ஒரு அறிக்கையில் கிராமப்புற மக்களின்வருமானம் குறைந்திருந்ததை மகிழ்ச்சி யோடு குறிப்பிட்டிருந்தார். நான் முன் பட்ஜெட்விவாதத்தில் அப்போதைய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியைப் பார்த்து கேட்டேன். கிராமப்புற மக்களின் வருமானம் வீழ்ச்சி அடைவதை உங்களது அறிக்கை கொண்டாடுகிறதே என்று. அந்த கூட்டத்தில் அரவிந்த் சுப்ரமணியனும் அமர்ந்திருந்தார்.  ஆகவே இவர்களை விட அறிவார்ந்த மாற்றை முன் வைக்கிற ஆற்றல் தொழிற்சங்க இயக்கத்திற்குஉள்ளது. அறிவார்ந்த புரிதலை இரவல் வாங்குகிற நிலைமையில் நாம் இல்லை. நாம் நமது அறிவார்ந்த கருத்தை, மாற்றை மக்கள்முன் வைக்க வேண்டும். அறிவார்ந்த தொழிலாளி வர்க்கம் தனது நண்பர்கள் யார்,எதிரிகள் யார் என்பதையறிந்து செயல்படவேண்டிய தருணம் இது. உழைப்பாளர் நலன் சார்ந்த கொள்கைகளை அரசுகள் உருவாக்க போராட வேண்டும்.

காலம் கோரும் ஒற்றுமை
கருத்தாலும், கரத்தாலும்  உழைக்கும் மக்கள் தனது எதிரி யார் என்று தெரிந்து போராடினால் வெற்றி கிடைக்கும். விரிந்த களம், விரிந்த கைகோர்ப்பு இன்றைய தேவை.நாம் பல அகில இந்திய வேலை நிறுத்தங்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். அத்துணை வேலை நிறுத்தங்களிலும் ஒரே விதமான கோரிக்கைகள், முழக்கங்கள். அது தகர்க்கப்படும் இந்திய பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்பது. எல்.ஐ.சி, ஜி.ஐ.சி, கெயில், பாதுகாப்புத்துறை, பி.பி.சி.எல், எச்.பி.சி.எல், ஏர் இந்தியா விமான நிறுவனம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்பது நமது கடமையாக உள்ளது.  பன்னாட்டு தனியார் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முறியடித்து மக்களுக்கான கொள்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 2018ல் ஜனவரி 8, 9 ல் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தினோம். இந்த ஆண்டும் ஜனவரி 8 மாபெரும் வேலை நிறுத்தத்தை நடத்தியுள்ளோம். அதில் இன்சூரன்ஸ் ஊழியர்களின் பங்கு மகத்தானது. இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய போராட்டமாக இருந்தது. 

இதுவா தேசபக்தி?
இன்று பொதுத்துறை தாக்கப்படுவது நடந்தேறுகிறது. பொதுத் துறையின் வரலாறு நீண்டது. நெடியது. ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கப்பட்ட இந்த கட்டிடம் இன்று சிதைக்கப்படுகிறது. தனியார்மயம் எனில் உள்நாட்டு தொழில் சிதைக்கப்படுகிறது என்று பொருள். உள் நாட்டு உற்பத்தி தளங்களை எல்லாம் வெறும் உதிரிகளை இணைக்கிற தலங்களாக மாற்றுவது என்று பொருள். பாதுகாப்பு தளவாடங்கள் போன்ற துறைகளில் கூட பன்னாட்டு மூலதனத்தின் லாப வெறிக்கு இரையாகிற முடிவுகள் திணிக்கப்படுகின்றன. தேசபக்தி பற்றி உபதேசிக்கிற மோடி அரசின் போலி தேசியத்திற்கு உதாரணங்கள் இவை. பொதுத்துறை திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது. ஏர் இந்தியா இன்று சந்திக்கிற நெருக்கடிக்கு அரசே காரணம். பன்னாட்டு விமான நிறுவனங்களுக்காக லாபகரமான வழித் தடங்கள் தாரை வார்க்கப்பட்டன. ஏர் இந்தியா, இந்தியன் ஏர் லைன்ஸ் இணைப்பு அவசர கோலமாகசெய்யப்பட்டதால் நிர்வாக ஒருங்கிணைப்பில் சிரமங்கள் ஏற்பட்டன. இப்போதும் அந்நிறு வனம் செயல்படு லாபத்தை காண்பிக்கிறது. ஆனால் கடன் சுமையை காரணம் காண்பித்து மொத்தமாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ளது. 

எல்.ஐ.சி பங்கு விற்பனையும் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. எல்.ஐ.சி தனியார் மயமாவது என்பது அந்த நிறுவனம் மட்டும் குறி வைக்கப்படுவதல்ல. எல்.ஐ.சி பல பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க அளவில் பங்குகளை வைத்துள்ளது. இப்போது எல்.ஐ.சி தனியார் மயமாக்கப் பட்டால் அது பல பொதுத் துறை நிறுவன ங்களை பாதிக்கலாம். இந்த முக்கியமான அம்சத்தை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.எல்.ஐ.சியை ஏன் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும்? எல்.ஐ.சி சுயமாக முடி வெடுத்து, தன்னாட்சியோடு செயல்படுகிற நிறுவனம். தேசத்திற்கு தேவையான பொருளாதாரத்தையும் மக்களின் சேமிப்பின் மூலம் திரட்டி வழங்கும் நிறுவனம். எல்.ஐ.சிக்கு எதிராக செயல்படும் அரசிற்கு எதிரான வலுவான போராட்டத்தை மேலும் முன்னெடுக்க வேண்டிய நேரமிது.ஜனவரி 27 அன்று சென்னையில் நிறைவடைந்த சிஐடியு16 வது  அகில இந்திய மாநாடு பொதுத் துறைகளை பாதுகாக்க, பலப்படுத்த மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. எல்.ஐ.சியை பாதுகாக்கிற போராட்டத்திலும் துணை நிற்போம்.

பின்புல அரசியல் அறிவோம்
வேலை நிறுத்தங்களை வெற்றியாக்கு வதோடு நமது பணி முடிந்துவிட்டதா என்பதே கேள்வி. இவ் வேலை நிறுத்தங்களில்ஈடுபடுகிற கோடிக் கணக்கான தொழி லாளர்கள் பின்புல அரசியலை உள் வாங்கி யிருக்கிறார்களா? அவர்களிடம் நாம் அதை பகிர்ந்திருக்கிறோமா? என்பதை நாம் விவாதிக்க வேண்டும். தொடர்ச்சியாக அரசாங்கத்தின் வியூ கங்கள் மக்களை முட்டாள்களாக்க முனை கின்றன.  அரசியலே மக்களின் வாழ் நிலையை,தேசத்தின் முன்னேற்றத்தை தீர்மானிக்கிறது. எனவே அந்த அரசியலை மக்களுக்கான அரசியலாக உழைப்பாளி மக்களுக்கான அரசியலாக, மாற்ற நாம் பாடுபட வேண்டும்.தற்பொழுது சந்தை  பின்னடைவை சந்தித்து வருகின்றது. ஏனெனில் மக்களின் வாங்கும் திறன் குறைந்து வருகின்றது.  சந்தைக்குத்தேவை பணப் புழக்கம்.  வேலை வாய்ப்புகள் சுருங்கி வருவதாலும், வேலையின்மை அதிகரித்து வருவதாலும் சந்தை சுருங்கிப் போயுள்ளது. சாதாரணத் தொழிலாளிக்கு 100 ரூபாய் கிடைக்கிறதெனில் அதில் 80 ரூபாய் சந்தைக்கு மீண்டும் வரும். அதே வேளையில்முதலாளிகளுக்கு 100 ரூபாய் கிடைக்கிற தெனில் 20 ரூபாய் மட்டுமே சந்தைக்கு வரும்.  மீதி அனைத்தும் ஊக வணி்கமாக மாறி இலாப வேட்டையை நோக்கிச் செல்லும். ரிசர்வ்வங்கியின் பணத்தில் பெரு முதலாளிகளுக்கு வழங்கிய ரூ.145000 கோடி பணம் சந்தைக்கு வரும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அது அவர்களுக்கான இலாபமாகச் சென்றது. சந்தைக்கு வர வேலைவாய்ப்பு மிக முக்கியம். சாதாரண மக்களின் கைகளில் பணம் புழங்குவது முக்கியம்.

தலை கீழ் சிந்தனை
வேலை வாய்ப்புகளை உருவாக்கிடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு மாறாகவும், மக்களின் கைகளில் வருவாயை உயர்த்துவதற்கு மாறாகவும் அரசு என்ன செய்கிறது?  கார்ப்பரேட் வரிகளை 5 ஆண்டுகளில் 33 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக  குறைக்கப்பட்டுள்ளது. தலை கீழாக அரசாங்கம் சிந்திக்கிறது. இன்னும் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை முதலாளிகளால் முன் வைக்கப்படுகிறது. வரும் பட்ஜெட்டில் மேலும் குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.  அரசு வாக்களித்த மக்களுக்காக செயல்படாமல் தங்களுக்கு நிதி ஆதரவளித்த நன்கொடையாளர் களுக்காக செயல்படுகிறது.பிப்ரவரி 4ம் தேதி சமர்பிக்கப்பட இருக்கிற மத்திய பட்ஜெட் மக்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைக்கலாம். மேலும் மூலதனலாபம் குறைவதால் அரசின் வரி வருவாயில்பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட மென்மேலும் சாதாரண மக்கள்தாக்கப்படலாம். இது எப்படி நெருக்கடியை தீர்க்கும்? நாம் சரியான தீர்வை மக்கள் முன் நிறுத்த வேண்டும். ஆனால் மக்களின் கவனம் இன்றுவெறுப்பு அரசியலால் திசை திருப்பப்படு கிறது.

குற்றம் புரிவதில் பெருமிதமா?
இன்றைய புறச்சூழலில் குற்றங்கள் பெருமிதத்தோடு பகிரப்படுவது அபாயகரமான வெளிப்பாடு. குற்றங்கள் காலங்காலமாய் நடந்தேறினாலும் அப்போதெல்லாம் குற்றத்தை மறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் இப்போது சாதி, பாலின தாக்குதல்களை நிகழ்த்தி, பதிவு செய்து, சமூக வலைத் தளத்தில் வைரலாக சுற்றுக்கு விடுகிற குரூரம் நிலைமையின் கடுமையை, வித்தியாசத்தை வெளிப்படுத்துவதாகும்.  இன்றைக்கு ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகிறது. காஷ்மீர்மக்களுக்கு மின்சாரம், கல்வி, குடிநீர், தொலைபேசி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் மறுக்கப்படுகின்றது. ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்த இருக்கிறசிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் திட்டத்தின் அபாயங்களை விளக்கி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நாம் பணி புரியும் இடங்களில், தெருக்களில், இல்லங்களில் என்று பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும். தேசத்தின் ஜனநாயக, அரசியல் அமைப்பு சட்ட மாண்புகளை பாதுகாக்க வேண்டும்.

நம்பிக்கை தரும் உதாரணங்கள்
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு ஒரு வரலாறு உண்டு. அது 5000 தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய போராடி வெற்றி கண்டது. இப்போது 8000 நிரந்தர பணி நியமனங்களை உறுதி செய்துள்ளீர்கள். நவீனதாராள மயத்திற்கு எதிராக போராடுகிறீர்கள். ஏனைய தொழிற் சங்கங்களுக்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் முன்மாதிரி ஆகும். உழைப்பாளி மக்கள் நலன் காக்க போராட்டங்களை நடத்துவது மட்டுமல்ல; முதலாளித்துவ அமைப்பையே மாற்றவேண்டியுள்ளது. முதலாளித்துவ சமூகம் நீதியை வழங்க முடியாது.  அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் சமூகமாக இதை மாற்ற வேண்டிய கடமை நம் முன் உள்ளது.விசாகப்பட்டினத்திற்கு  போராட்ட வரலாறு உண்டு. இங்கு ஸ்டீல் பிளாண்ட் தொழிலாளர்கள் தனியார் மய முயற்சிகளை வாயிலில்முற்றுகை நடத்தி தடுத்து நிறுத்தியுள்ளார்கள். இதுபோன்ற நேரடி நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நம்முடைய வியூகமாக மாறவேண்டும்.  அப்படிப்பட்ட போராட்ட பூமியில்உழைப்பாளர் நலன்களை வென்றெடுக்க, வேலை வாய்ப்புகளை உருவாக்க, தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுவதற்கு எதிராக, தொழிலாளர் பணிச்சூழல், வாழ்வு மேம்பட, தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்க ஏ.ஐ.ஐ.இ.ஏ முன்னெடுக்கும் போராட்டங்கள் வெற்றி பெற சி.ஐ.டி.யு அமைப்புகளும் உங்களோடும் கைகோர்க்கும்.

தமிழில் : சீர்காழி ஸ்ரீதர்

;