புதுதில்லி:
இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப் படை டெண்டர் கோரியுள்ளது. 18 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் சமீபகாலங்களில் உலகில் வேறெந்த நாடும் செலவிடாத மிகப் பெரிய தொகை என்றால்,இந்த ஒப்பந்தத்தைப் பெற அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல போட்டியிடுகின்றன. எனினும், அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்டின் நிறுவனமே முன்னணியில் நிற்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனம்தான் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனமாகும்.மிக் 35 விமானங்களுடன் ரஷ்யா, சாப் 35 கிரிப்பன் விமானங்களுடன் சுவீடன், எப்.ஏ.-18 விமானங்களுடன் போயிங் நிறுவனம், ரபேல் விமானங்களுடன் பிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனம், டைப்யூன் விமானங்களுடன் யூரோபைட்டரின் நிறுவனம் ஆகியவை களமிறங்கியுள்ள நிலையில், ‘எப் 21’ ரக விமானங்களுடன் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
தங்களின் ‘எப் 21’ ரகத்திலேயே 114 விமானங்களையும் இந்தியா வாங்கிக் கொள்வதாக இருந்தால், உலகில் நாங்கள் வேறு எந்த நாட்டிற்கும் இவ்வகை விமானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் ஆசை காட்டியுள்ளது.லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் வியாபார வியூக மற்றும் அபிவிருத்தி துறையின் துணைத் தலைவர் விவேக் லால் இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்தியாவின் 60 விமான நிலையங்களில் செயல்படும் வகையில் எப்.21 ரக புதிய போர் விமானம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் முக்கிய அம்சங்களில் உயர்தர இயந்திரம், மின்னணு போர்த் திறன் கட்டமைப்பு, ஆயுதங்களை ஏந்திச்செல்லும் திறன் ஆகியவை அடங்கும்.
இந்தியா எங்களிடம் 114 விமானங்களையும் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தால் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உலகில் யாருக்கும் வழங்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்த விமானங்களை தாங்கள் தயாரிப்பதால், விலையும் குறைவாக கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எப்-21 போர் விமானம், ரேடார்களுக்கு சிக்காமல் செல்லும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 910 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள் மற்றும் 450 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகளை தாங்கிச்சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.