tamilnadu

img

காவிக்கும்பலின் மிரட்டல் கேரளத்தில் விலைபோகாது....பினராயி விஜயன் எச்சரிக்கை

கோழிக்கோடு:
ஆர்எஸ்எஸ்-சின் உள்நோக்கத்தை செயல்படுத்துவதற்கு உரியதல்ல கேரளம் என்றும், பாதுகாப்பின் கோட்டையாக உள்ள கேரளத்தில் சங்பரிவாரின் மிரட்டல் விலைபோகாது எனவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.அரசமைப்பு பாதுகாப்புக் குழு சார்பில் கோழிக்கோடு கடற்கரையில் ஞாயிறன்று ஏற்பாடு செய்திருந்த அரசமைப்பு சாசன பாதுகாப்பு பேரணியில் கேரள முதல்வர் மேலும் பேசியதாவது:

நாட்டின் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதன் முன்னோடியாக மத்திய அரச தந்திரமாக நடைமுறைப்படுத்தும் மக்கள்தொகை பதிவேடு கேரளத்தில் அமலாகாது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி கூறலாம்.இங்கு பிறந்து வளர்ந்தவர் யாரும் மூதாதையரின் பிறப்புச் சான்றுக்காக அலைய வேண்டிய அவசியம் இல்லை என உறுதியளிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இந்த ஒற்றுமையே முக்கியமானது. இந்த போராட்டத்திலிருந்து வகுப்புவாதிகள், தீவிரவாதிகள் என்கிற இரண்டு பகுதியினரை நாம் விலக்கி வைக்கலாம். இவர்களுக்கு நமது போராட்டத்தில் இடமளிக்கப்படாது. ஒரு குறிப்பிட்ட பகுதியை குடியுரிமையிலிருந்து விலக்கி வைக்கும் தந்திர முயற்சி நடக்கிறது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் முஸ்லீம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. எராநாட்டின் வீர மகன், வாரியம் குந்நத்து குஞ்சம்மத் ஹாஜி, மற்றும் வரி எதிர்ப்பு போராளி உம்மர் காசி ஆகியோரை நம் வரலாற்றிலிருந்து பறித்து அகற்ற முடியாது.ஆனால், விடுதலைப் போராட்டத்தில் ஒரு பங்கும் வகிக்காமல் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்த வெட்கமில்லாத வரலாறுதான் சங்பரிவாருக்கு உள்ளது. விடுதலைப்போரின் உற்பத்திதான் நமது அரசமைப்பு சாசனம். ஆனால், அரசமைப்பு சாசனத்திலும் மதச்சார்பின்மையிலும் ஆர்எஸ்எஸ்க்கு ஆர்வம் இல்லை. மத அடிப்படையிலான ஒரு நாட்டையே அவர்கள் விரும்புகிறார்கள். சிறுபான்மையினரை உள்நாட்டு எதிரிகளாக பார்க்கிறார்கள்.

கிறித்தவர்களும் கம்யூனிஸ்ட்டுகளுமே அடுத்த எதிரிகள். மக்கள் தொகை பதிவேடு பெரும் சதியாகும். வகுப்புவாத கொள்கையின் பகுதியே அது. அசாம், இதற்கு பொருத்தமான உதாரணமாகும். நாட்டில் உள்ள முஸ்லீம்கள் மிகப்பெரும் பீதியில் உள்ளனர். தாக்கியவர்கள் மீது வழக்கு போடாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அபூர்வ நிகழ்வை ஜேஎன்யுவில் காண்கிறோம். ஆனால் ஜேஎன்யூ உட்பட நாட்டின் முக்கிய பல்கலைக் கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் போராட்டக் களத்தில் உள்ளனர் என்பது நல்ல செயல்.இவ்வாறு முதல்வர் கூறினார்.  நிகழ்ச்சிக்கு சமஸ்தா கேரள ஜாமியதுல் உலமா பொதுச் செயலாளர் கே அலிகுட்டி முஸ்லியார் தலைமை வகித்தார். எழுத்தாளர் கே.பி.ராமனுண்ணி அரசமைப்பு சாசனத்தின் முகப்பை வாசித்தார். கே.டி.குஞ்ஞி கண்ணன் வரவேற்றார்.

;