திருவனந்தபுரம்:
நால் வர்ணவாதம், மூடநம்பிக்கை, மரபுவழி ஆகியவற்றின் இருண்ட கடந்த காலத்திலிருந்து முற்போக்கான சிந்தனையின் வெளிச்சத்துடன் எதிர்காலத்திற்கு நாடு செல்ல வேண்டும். பன்முகத்தன்மை சரிந்தால் இந்தியாவின் இருப்பு வீழ்ச்சி அடையும். அதைத் தடுக்க மதவெறிவாதத்திற்கு எதிராக இளைஞர்கள் ஒன்றுபட வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்தார்.
‘மத அரசியலின் அழிவிலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள்’ என்ற முழக்கத்தின் கீழ் டிஒய்எப்ஐ கேரள மாநிலக் குழு ஏற்பாடு செய்திருந்த ‘இளைஞர்களுக்கான இந்தியா’ (யூத் பார் இந்தியா) என்கிற காணொலி நிகழ்ச்சியை சனிக்கிழமையன்று கேரள முதல்வர் துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர், வளர்ச்சிக்கு பதிலாக அழிவை எதிர்கொள்ளும். வகுப்புவாதம், சாதியவாதம் மற்றும் மத தேசியவாதத்திற்கு எதிராக இளைஞர்களை அணி திரட்டும் ஒரு முக்கிய பணியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மேற்கொண்டுள்ளது. டிஒய்எப்ஐ என்பது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாதம், இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராக போராடிய வரலாற்றைக் கொண்ட ஒரு இயக்கம் என்று குறிப்பிட்டார்.
பிரிவினைவாதத்துக்கு எதிரான தியாகம்
காலிஸ்தான் பிரிவினைவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் போது டிஒய்எப்.ஐ மாநில தலைவர்கள் கூட தங்களது இன்னுயிரை ஈந்தனர். அசாம் மற்றும் காஷ்மீரில்,வகுப்புவாதத்தில் வேரூன்றிய பிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிராக ஒரு தியாகப் போராட்டத்தை டிஒய்எப்ஐ நடத்தியது. இந்திய சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் எந்தப் பங்கையும் வகிக்காத சங் பரிவார் மற்றும் அதன் அரசியல் வடிவமான பாஜகவுக்கு மக்கள் நடத்திய சுதந்திரப் போராட்டத்தின் தியாக வரலாறு பற்றி எதுவும் தெரியாது. எனவே, பாடுபட்டு வென்ற இந்தியாவின் சுதந்திரம், இறையாண்மை, சிவில் உரிமைகள் மற்றும் அரசியலமைப்பின் விழுமியங்களை விட்டுக்கொடுக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எனவே, இந்த சூழ்நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் நினைவுபடுத்தினார்.நாடாளுமன்ற அமைப்பை குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கும், சட்ட அமைப்பை ஒரே சிவில் குறியீடாக மாற்றுவதற்கான வாதங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் பின்னால் உள்ள நோக்கம் பன்முகத்தன்மையின் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனநாயகத்தின் மீதான ஆர்வமா என்பதை நாம் ஆராய வேண்டும். இது மாறுபட்ட வாழ்க்கை முறை, மொழி, மதம், கலாச்சாரம் கொண்ட நாடு. பன்முகத்தன்மை சரிந்தால், இந்தியாவின் இருப்பு சரிந்து விடும். பல்வேறு கலாச்சாரமும், பண்பாடுகளின் பன்முகத்தன்மையும் நம்மிடம் உள்ளது. அதன் ஒற்றுமையே இந்தியாவில் உலகம் காணும் சிறந்த அம்சம். அந்த ஒற்றுமை ஒற்றை மதம், அரசியல், கலாச்சாரத்தால் அரிக்கப்பட்டு வருவது இந்தியா என்ற உணர்வு.
வரலாற்றை மாற்றும் முயற்சி
வெவ்வேறு மதங்களைச் சார்ந்தோரும் மதங்களைச் சாராதோருமான மக்களின் கூட்டுப் போராட்டத்தின் மூலம் விடுதலை பெற்றோம். அந்த விடுதலைப் போராட்டத்தில் வெவ்வேறு பிரிவுகளின் பங்கை புறக்கணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிராத ஒரு குறிப்பிட்ட அரசியலுக்கு தேச விடுதலையின் மீது ஏகபோகத்தை சுமத்துவதற்கான நகர்வுகள் நடக்கின்றன.அதன்படி, வரலாற்றை தவறாகப் புரிந்து கொள்வதற்கும் முன்வைப்பதற்கும் தேசிய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய வரலாற்றை கட்டமைப்பது மத அடிப்படையில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கலாச்சாரமூலதனமாக சிலர் கருதுகின்றனர். ஆனால், இவர்களது இத்தகைய நகர்வுகளுக்கு எதிரான பரவலான விழிப்புணர்வு மதச்சார்பற்ற மனங்களில் ஏற்பட்டு வருவது கவனிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.மதச்சார்பற்ற மனப்பான்மையிலிருந்து இளைஞர்களை தவறாக வழிநடத்தவும், தடுக்கவும் கேரளாவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நியமனங்கள் கிடைக்கவில்லை என்று இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தகைய அச்சத்தை உருவாக்க ஒரு முன்னணி ஊடக நிறுவனம் ஒரு நெடுந்தொடரை துவக்கியுள்ளது.
ஆனால், கடந்த ஏப்ரல் நிலவரப்படி, பி.எஸ்.சி மூலம் 1,33,132 பேருக்கு அரசு வேலை வழங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் 3668 தரவரிசை பட்டியல்களை பி.எஸ்.சி. வெளியிட்டது. அரசுப்பணி என்பதை எல்டிஎப் சாத்தியப்படுத்தியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகபட்ச வேலை வாய்ப்புகளை எல்டிஎப் அரசு உருவாக்கியுள்ளது. யுடிஎப் காலத்தில் 300 ஸ்டார்ட் அப்கள் (புதிய தொழில் முயற்சி) மட்டுமே இருந்தன, இப்போது நான்கு ஆண்டுகளில் 2200 ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. நியமனங்களை முடக்கும் வரலாற்றைக் கொண்டவர்கள் நியமனம் இல்லை என மாற்றி கூறுகின்றனர். இவற்றை அம்பலப்படுத்த இளைஞர்கள் களமிறங்க வேண்டும்.ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் வேலை வழங்க இயலாமை நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் நாசகர பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்படுகிறது. அந்தக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசமைப்பு சாசனம், அரசிமைப்பு நிறுவனங்கள், சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம், மதச்சார்பின்மை ஆகியவற்றின் மாண்புகளை நிலைநிறுத்துவதற்கு இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என்று பினராயி கூறினார்.