tamilnadu

img

குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறுக!

சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 16- குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்தும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழமைக் கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திங்களன்று (டிச. 16) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: குடியுரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்களால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடே பற்றி எரிகிறது. தில்லியில் இதற்கெதிராக போராடும் மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல். வடநாடு கலவர பூமியாக மாறி வருகிறது. 

அம்பேத்கர் இருந்தால் காரி உமிழ்ந்திருப்பார்

இஸ்லாமியர்களைத் தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் சீரழிக்கிறார்கள். மக்களவையில் பிரதமர் மோடி, ‘அரசியல் சாசனத்தை பாது காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பார்த்து அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் மனம் குளிர்ந்து போவார்’ என்று பேசினார். ஒருவேளை அம்பேத்கர் இதைப்  பார்ப்பாரேயானால் அரசியல் சாசனத்தைக் இழிவுப்படுத்துகிற உங்களைப் பார்த்து காரி உமிழ்ந்திருப்பார்.

இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் வழங்குக!

மத அடிப்படையில் நாட்டைக் கூறு போடுகிறது மத்திய அரசு. ஜனநாயகத்திற்கு சமாதி கட்டுகிற நிலைமை உருவாகியிருக்கிறது. இலங்கை ஆட்சியாளர்களின் கொடுமை தாங்காமல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்க மறுக்கிறீர்கள்? வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து வருகின்ற இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமாம்; இலங்கையிலிருந்து வந்திருக்கக் கூடியவர்கள் இந்துக்கள்தானே குடியுரிமை வழங்குங்கள் என்றால் வழங்க முடியாது என மத்திய அரசு கூறுகிறது.

ராஜபக்சேவாக மாறிய மோடி 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறை வேற்றி இருப்பதன் மூலம் நரேந்திரமோடி ராஜ பக்சேவாக மாறியிருக்கிறார். எனவே இந்திய நாட்டிலே அயோத்தி தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம், குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம், மத்திய அரசின் மதவெறி அரசியலுக்கு எதிராக போராட்டம் என தனித்தனியாகப் போராட்டம் நடத்தும் காலம் மாறியிருக்கிறது. நரேந்திர மோடி அரசுக்கு முடிவு கட்டுகிற வகையில் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன் எடுக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர் கலி.பூங்குன்றன், தமிழ்நாடு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் கே.எம்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர்  பேராசிரியர் காதர் மொய்தீன், இந்து குழு மத்தின் தலைவர் என்.ராம், மூத்த வழக்கறி ஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர். வைகை, சமூக செயல்பாட்டாளர் பேரா.அ.மார்க்ஸ், கல்வி யாளர் தாவூத் மியாகான், ப்ரண்ட்லைன் ஆசிரி யர் ஆர்.விஜயசங்கர், மூத்த ஊடகவியலாளர் ஜென்ராம்,  ஆகியோரும் பேசினர்.


சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தியும் ஆவேச முழக்கமிட்டனர்.

;