tamilnadu

img

பருவநிலை ஆராய்ச்சியை காட்டிலும் சமஸ்கிருத ஆய்வுக்கு அதிக நிதி.... ரூ.643 கோடியை அள்ளிக் கொட்டிய மோடி அரசு

புதுதில்லி:
மத்திய அரசு பாஜக அரசானது, நாட்டின் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிக்கு ஒதுக்கீடு செய்த நிதியைக் காட்டிலும், அதிகமான நிதியை 24 ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர்.

செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட இந்திய மொழிகளின் விவரங்கள், அவற்றின் மேம்பாட்டுக்கு செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு குறித்து, நாடாளுமன்ற மக்களவையில் சிவசேனா எம்.பி.க்கள் 3 பேர், பாஜக எம்.பி.க்கள் 2 பேர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், “தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுள்ளன” என்று கூறிவிட்டு, இந்த மொழிகளுக்கான நிதி ஒதுக்கீட்டையும் பட்டியலிட்டுள்ளார்.

இதில், சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு மட்டும் கடந்த 2017 முதலான 3 ஆண்டுகளில் மொத்தம் 643 கோடியே 84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதையடுத்தே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு எதிராக கொதித்துள்ளனர். 130 கோடி மக்களைக் கொண்ட, நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பருவநிலை மாற்ற ஆராய்ச்சிக்கு, மொத்தமே 533 கோடி ரூபாயை மோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், 24 ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்தின் மேம்பாட்டுக்கு ரூ. 643 கோடியா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அதேபோல, இந்தியாவிலுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏனைய செம்மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியைக் காட்டிலும், 22 மடங்கு அதிக நிதியை சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கியிருப்பதாக மொழியியல் துறையினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமஸ்கிருதத்திற்கு ரூ. 643 கோடி ஒதுக்கியிருக்கும் மோடி அரசு, தமிழுக்கு வெறும் 22 கோடி ரூபாயையும், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு சுமார் 3 கோடி ரூபாய் என்ற அளவிலும் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.நபர்கள் அடிப்படையில் கணக்கிட்டால், தமிழ் பேசுவோருக்கு தலா ஒரு ரூபாய் 13 காசுகளும், கன்னடம் பேசுவோருக்கு தலா 24 காசுகள், தெலுங்கு பேசுவோருக்கு 13 காசுகளை மட்டுமே செலவிட்டுள்ள மத்திய அரசு, சமஸ்கிருதம் பேசும் ஒருவருக்காக 93 ஆயிரத்து 126 ரூபாய் செலவிட்டு பாரபட்சம் காட்டியுள்ளது.

;