tamilnadu

img

சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் பாவலர் வரதராசன் - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 6

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் தலைசிறந்த கலைஞராக நீண்ட காலம் உலா வந்தவர் தோழர் பாவலர் வரதராசன். சொந்தமாக பாடல் எழுதுவதிலும், மெட்டு போடுவதிலும், கிராமிய இசையை கலப்பதிலும், திரையிசை பாடல் மெட்டுகளை பயன்படுத்துவதிலும் ஆற்றல்மிக்க கலைஞர். இன்றைய தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த இந்த மகா கலைஞனின் தம்பிகள் தான் பாஸ்கர், இராஜையா (இளையராஜா), அமர்சிங் (கங்கை அமரன்) ஆகியோர். இந்த நான்கு சகோதரர்களும் தமிழகமெங்கும் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாடியவர்கள்.    பாவலரின் பாடல்களில் தமிழ் கவிதாமரபுப்படி இசை, இலக்கணம் மிளிரும். எதுகையும், மோனையும், ஓசையும், சந்தமும், அசைகளும், சீர்களும் கொஞ்சி விளையாடும். அவரது பாடல்களில் உருவமும், உள்ளடக்கமும், பொருத்தமாய் இணைந்தே இருக்கும். அதனால்தான் அவரது பாடல்களுக்கு வெற்றி கிடைத்தது. அவரது நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே பாடும் பாடல்-

“தாய்நாட்டுக்காக தன் உடல் பொருள் ஆவியை  தந்த தியாகிகளுக்கு வணக்கம் தாலி அறுத்த பெண்ணை மறுமணம் செய்திட்ட  வாலிபர்க்கெல்லாம் வணக்கம்”  -என்று துவங்கி கடவுள் மறுப்பு செய்திகளையும் கிண்டலாகக் கூறுவார். “பாலைக் குடம்குடமாய் சாமி தலையில் கொட்டி,  பாழ்படுத்தாதவர்க்கும் வணக்கம்” என்று அவர் பாடும்போது கூட்டத்தில் பலத்த கைத்தட்டல் எழும்.  மக்கள் மீது அரசாங்கத்தினுடைய தாக்குதல்கள், தடியடிகள், படுகொலைகள் எல்லாவற்றையும் பற்றி பாடல் எழுதுவார். அவரிடம் பெரிய இசைக் கருவிகள் கிடையாது. ஒரு பழைய ஆர்மோனியம், தபோலா, ஜால்ரா மற்றும் அவரது தம்பிகள் மட்டும்தான். அவரது கச்சேரியை கேட்பதற்கு அனைத்துக் கட்சியினரும் வந்து கூடுவார்கள். பாராட்டுவார்கள்.  நிலப்பிரபுக்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை எப்படி அமுக்கினார்கள் என்பதைப் பற்றி கவிஞர் திருமூர்த்தி ஒரு பாடலை எழுதினார். அந்தப் பாடலை கோபத்தோடும், எக்காளத்தோடும் பாடும்போது கூட்டம் ஆவேசமடையும். 

“ஆண்டவனே சர்வே போட்டு அளந்துவிட்டானா- இல்லை அவனவனே நிலத்தையெல்லாம் அமுக்கிக்கிட்டானா” 

என்று பாடிவிட்டு எந்தெந்த நிலப்பிரபு எத்தனை ஆயிரம் ஏக்கரை அமுக்கினார் என்ற பட்டியலையும் பாடுவார். அவரது தம்பிகளும் இணைந்து பாடுவார்கள். 1957 தேர்தலின்போது கேரளத்தில் பிரச்சாரம் செய்ய தோழர் ஐ.மாயாண்டி பாரதியுடன் பாவலர் குழு சென்றது. அந்த தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரசை கிண்டல் செய்து 

‘‘ஒத்த ரூபா தாரேன்,  நான் உப்புமா காப்பியும் தாரேன் காளை மாட்டைப்பார்த்து நீ  கணக்காக குத்து” - என்ற பாடலை பாடினார்கள்.

1965ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் கடுமையாக நடந்தது. மாணவர்கள் மீது அன்றைய காங்கிரஸ் அரசு தடியடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தியது. பலர் செத்து மடிந்தனர். அதைக் கண்டித்து 

“ரத்தவெறி கொண்டவரே  நாடாள வந்தவரே  பெற்றவர் வயிற்றையெல்லாம்  பற்றி வேகவிட்டவரே  எத்தனை உயிரை இன்னும்  சுட்டு வெறி தீர்ப்பீரோ  பள்ளியில் படிக்க வைக்க  பட்டகடன் தீரவில்லை  கொள்ளி வைக்கும் பிள்ளைக்குத் தாய் கொள்ளி வைக்க வைத்துவிட்டீர் - ஐயகோ!” இப்பாடலைப் பாவலர் பாடிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்திலிருந்து அழுகையும் கேவலும் வரும். அதுவே கலையின் வெற்றியாகும்.

அரசியல் எதிரிகளை நையாண்டி செய்வதில் பாவலர் மிகுந்த சமர்த்தர். அவரது நையாண்டி மக்களை விலா நோகச் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும். உதாரணமாக,  1969ஆம் ஆண்டில் தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடுத்திட்டம் மிகக் கொடூரமான முறையில் அமல்படுத்தப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைக்கு ஆசிரியர்கள் ஆள்பிடித்து வரவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அக்காலத்தில் ஆராதனா என்ற இந்திப் பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாட்டின் மெட்டில் கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை கண்டித்து பாவலர் எழுதிப் பாடிய பாடல் முதலில் விருதுநகர் மேடையில் அரங்கேறியது. “லூப்புத் தரான் சரிதானா மாட்டலன்னா உடுறானா நாளைய வாரிசு வீணாப் போகுதே” பாவலர் இதைப் பாடும் போது கூட்டமே கொல்லென்று சிரிக்கும். பாடலை முடிக்கும் போது, “கருவோடு தானே விளையாடுகின்ற கொலைகாரராட்சி இனிமேலும் வேண்டாம் ஆயிரமாயிரம் பேரை அறுத்தானே- ஏ ஏ” என்று பாடும் போது கூட்டம் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்துவிடும். மெய்யான மக்கள் கலைஞர் அவர்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி நாட்டில் உருவாக வேண்டுமென்ற உணர்வோடு தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்தவர். வறுமையைப் துச்சமாக எண்ணியவர். மனித வாழ்வின் சகல அம்சங்களையும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஊடுருவிப் பார்த்தவர். இதை அவரது ஒவ்வொரு பாடலிலும் காண முடியும். 

பாவலரின் கலை நிகழ்ச்சியின் கடைசிக் காட்சிதான் உச்சகட்டமாகும். தியாகி சிவராமனின் வீரகாதையை தனியே அரைமணி நேரம் பாடுவார். கதையைத் துவக்கும்போதே,

“அண்ணே சேதியொண்ணு சொல்லப் போறேன் - உங்க செவியக் கொஞ்சம் சாச்சிடுங்க - நான் ஆதி முதல் சொல்லப் போறேன் - நீங்க அமைதியாகக் கேட்டிடுங்க நின்னுருக்கும் அண்ணமாரே - கொஞ்சம் நேரம் வரையில் உட்காருங்க, கூடீருக்கும் தம்பியரே - கொஞ்சம் கூச்சமின்றி உட்காருங்க”

இதைப் பாடியதும் அவர் பேசத் துவங்குவார். இது கதையோ, கற்பனையோ, நாடகமோ, கதாகாலட்சேபமோ இல்லை- நடந்த சம்பவம் என்பார். கூட்டமே கேவி அழும். அந்தக் கலை ஆற்றலே அவரது சிறப்பு.

தொடரும்...

;